வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து நான்கு கட்டங்களாக நாட்டில் ஊரடங்கு போடப்பட்டது. சிறப்பு விமானங்கள், சரக்கு விமானங்கள் தவிர மற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டன.
இதனிடையே மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதி அளித்ததை தொடர்ந்து கடந்த மே மாதம் 25 ஆம் தேதி முதல் நாட்டில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் கண்டிப்பாக இ.பாஸ்பெற வேண்டும், கொரோனா சோதனை மேற்கொள்ளவேண்டும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழகஅரசு அறிவித்திருந்தது. அதன்பின் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில், தற்போது மீண்டும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருவோருக்கும் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர பிறமாநிலங்களில் இருந்து வருவோர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இ பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.