
விவாகரத்து பெற்ற மற்றும் கணவரை பிரிந்த பெண்கள், தங்கள் தந்தையின் மறைவுக்கு பின் ஓய்வூதிய பலன்களை பெற, அரசு விதிகள் மற்றும் செயல்முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், கடினமான சூழ்நிலைகளை எதிர் கொள்ளும் பெண்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதற்காக, ஓய்வூதிய விதிகளில் குறிப்பிடத்தக்க திருத்தங்களை அரசு செய்துள்ளது.
அதன் படி, விவாகரத்து பெற்ற அல்லது கணவரை பிரிந்த பெண்கள், இறந்து போன தன் தந்தையின் ஓய்வூதியத்தை பெறுவதற்கான உரிமை வழங்கப்படுகிறது. மேலும், ஒரு பெண் ஓய்வூதியதாரர் விவாகரத்து நடவடிக்கைகளை துவங்கியிருந்தால், அல்லது குடும்ப வன்முறையில் பெண்களை பாதுகாக்கும் சட்டம் அல்லது வரதட்சணை தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்திருந்தால், அவர் தன் குழந்தைகளுக்கு ஓய்வூதியத்தை பரிந்துரைக்கலாம்.
குழந்தை இல்லாத விதவைகள் தற்போது மறுமணம் செய்து கொண்டாலும், கணவரது வருமானம் குறைந்தபட்ச ஓய்வூதிய வரம்புக்கு குறைவாக இருந்தால், இறந்த கணவரின் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்தை பெறலாம்.
தனிப் பெற்றோராக உள்ள தாய்மார்கள் தற்போது, படிப்படியாக இரண்டு ஆண்டுகள் வரை குழந்தை பராமரிப்புக்கான விடுமுறையை பெறலாம்.
கருச்சிதைவு அல்லது குழந்தை இறந்த பிரசவிப்பை அனுபவிக்கும் பெண்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கிய மகப்பேறு சலுகைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்