மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக புதுச்சேரிக்கு வந்துள்ளேன் என்று துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்று கொண்ட பின் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
கடந்த 2016, மே 28-ஆம் தேதி முதல் புதுவை யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பதவி வகித்த கிரண்பேடி, அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து, தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் புதுவை துணைநிலை ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என குடியரசுத் தலைவா் மாளிகை அறிவித்தது.
இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் காலை 9 மணிக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்பு மற்றும் ரகசிய பாதுகாப்பு உறுதிமொழியை தமிழில் எடுத்துக்கொண்டார்.
பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்று கொண்ட பின் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக புதுச்சேரிக்கு வந்துள்ளேன். தமிழில் உறுதிமொழி ஏற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களை இரட்டை குழந்தையாக கருதி கவனம் செலுத்துவேன். நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில், நாமே தயக்கம் காட்டக் கூடாது.
பெரும்பான்மையை நிரூபிக்க கோரிய மனு மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை. என்னுடைய அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்படுவேன்.
முதலமைச்சர், ஆளுநர், துணை நிலை ஆளுநரின் அதிகாரங்கள் என்னவென்று எனக்கு தெரியும். பெரும்பான்மையை நிரூபிக்க கோரிய மனு மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
என்னுடைய அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்படுவேன். தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை; ஆராதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.