• vilasalnews@gmail.com

தாத்தா முன்னாள் பிரதமர்.. அப்பா மத்திய அமைச்சர்.. ஆனாலும் தேர்தலில் 3 வது முறையாக தோற்ற நிகில் - சத்திய சோதனை!

  • Share on

தனது தாத்தா தேவகவுடா முன்னாள் பிரதமர். அப்பா குமாரசாமியோ கர்நாடகா முன்னாள் முதல்வர் மற்றும் தற்போதைய மத்திய அமைச்சர். இத்தகைய செல்வாக்கான அரசியல் குடும்பமாக இருந்தாலும் கூட நிகில் குமாரசாமி தொடர்ந்து 3வது முறையான தோல்வியை இன்று பதிவு செய்துள்ளார். 


நம் நாட்டில் அரசியலில் செல்வாக்கு பெற்ற குடும்பங்களில் ஒன்றாக விளங்குவது தேவேகவுடாவின் குடும்பம். கர்நாடகாவை சேர்ந்த தேவேகவுடா ஜேடிஎஸ் கட்சியின் தேசிய தலைவராக உள்ளார். இவர், கர்நாடகாவில் முதல்வர் பதவி வகித்ததோடு, நம் பாரத நாட்டின் பிரதமராகவும் இருந்துள்ளார்.


இவரது மகனான குமாரசாமி கர்நாடகாவின் முதல்வராக இருந்ததோடு, தற்போது மண்டியா தொகுதி எம்பியாகவும், பாஜக தலைமையிலான மத்திய  அரசில் அமைச்சராக உள்ளார். இன்னொரு மகன் ரேவண்ணா முன்னாள் கர்நாடகா அமைச்சர் என்பதோடு தற்போது ஜேடிஎஸ் எம்எல்ஏவாக உள்ளார்.


இப்படியான அரசியல் செல்வாக்கு குடும்பத்தில் பிறந்தவர் தான் நிகில் குமாரசாமிக்கு தேர்தல் அதிர்ஷ்டம் என்பது இல்லையோ என்ற கேள்வி எழும்படியாக தொடர்ந்து அவர் தேர்தலில் 3வது தோல்வியை இன்று சந்தித்துள்ளார். 


கர்நாடகாவில் ராமநகர் மாவட்டம், சென்னப்பட்டணா தொகுதி எம்எல்ஏவாக குமாரசாமி இருந்தார். இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சார்பில் மண்டியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார். பின்னர் இந்த தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக ஜேடிஎஸ் சார்பில் குமாரசாமி தனது மகன் நிகில் குமாரசாமியை களமிறக்கினார்.


இவருக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி சார்பில் யோகேஷ்வர் போட்டியிட்டார். இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர் வெற்றி பெற்றார். சிபி யோகேஷ்வர் மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 642 ஓட்டுகள் பெற்றார். நிகில் குமாரசாமி 87,229 ஓட்டுகள் பெற்றார். இதன்மூலம் சிபி யோகேஷ்வர், நிகில் குமாரசாமியை விட 25 ஆயிரத்து 413 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது நிகில் குமாரசாமியின் 3 வது தோல்வியாகும்.


முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தலில் நிகில் குமாரசாமி கவுடா ராமநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் குமாரசாமியின் மனைவியும், நிகிலின் தாயுமான அனிதா எம்எல்ஏவாக இருந்த நிலையில் நிகில் கவுடா தோல்வியை தழுவினார். நிகில் குமாரசாமி 76,975 ஓட்டுகள் பெற்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் உசேன் 87,690 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.


அதே போல, அதற்கு முன்பாக கடந்த 2019 ல் நடந்த மக்களவைத் தேர்தலின்போது மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போது மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியான நடிகை சுமலா சுயேச்சையாக போட்டியிட்டார். அவர் மொத்தம் 7 லட்சத்து 3 ஆயிரத்து 660 ஓட்டுகள் பெற்ற நிலையில், ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்ட நிகில் குமாரசாமி 5 லட்சத்து 77 ஆயிரத்து 784 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி தழுவினார். அன்று முதல் தோல்வியை கண்ட நிகில் குமாரசாமி தற்போது 3வது முறையாக தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமிக்கு அரசியலில் ராசியில்லையோ? என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, தனது பேரன் மற்றும் மகனின் தோல்வியால் தாத்தா தேவகவுடா மற்றும் தந்தை குமாரசாமி வருத்தமடைந்துள்ளனர்.

  • Share on

தேர்தல் முடிவுகள் 2024 : மகாராஷ்டிரா | ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை!

தொகுதியின் ஒரே இந்து வேட்பாளர்.... 30 ஆண்டுகளுக்குப் பின் தொகுதியை கைப்பற்றிய பாஜக!

  • Share on