• vilasalnews@gmail.com

இந்தியாவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது போடப்படும்?

  • Share on

இந்தியாவில் பிப்ரவரி இறுதியில் பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளையில், நாடு முழுவதும் 18 விழுக்காடு மக்களின் உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

கொரோனா தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

இதை தொடர்ந்து, காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கும், படிப்படியாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற துணை நோய்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மாத இறுதியில் பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரை தற்போது சுகாதார பணியாளர்களை தொடர்ந்து, அடுத்தகட்டமாக உள்ளாட்சித்துறை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தலைநகர் டெல்லியில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி குறித்து 5-ம் கட்ட செரோலாஜிகல் (serological) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, ஜனவரி 15 முதல் 23-ம் தேதி வரை 11 மாவட்டங்களைச் சேர்ந்த 28 ஆயிரம் பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

அதில், 56.13 சதவீத மக்களின் உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவானது தெரிய வந்ததாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (Satyendar Jain) தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 18 சதவீத மக்களின் உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாகவும் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

இதனால், 131 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 21 கோடிக்கும் அதிகமானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே  இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதாகவும், மேலும், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட கொரோனா முன்னெச்சரிச்கை நடவடிக்கையால் இந்தியாவில் தொற்று பரவல் விரைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

  • Share on

பட்ஜெட் தாக்கலின் எதிரொலி ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் லாபம்

போக்குவரத்து உரிமம் பெற இடைத்தரகர்களிடமும் சிக்கும் முறைக்கு முடிவு : நிதின் கட்கரி

  • Share on