டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஆயிரக்கணக்கானோரின் கரகோஷங்களுக்கு நடுவே, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்றார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும், பாஜக தனித்து நின்று பெரும்பான்மை பலத்தை பெறாததால், நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவோடு ஆட்சியமைக்க வேண்டிய நிலை பாஜகவுக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி, மத்தியில் ஆட்சியமைப்பது உறுதியானது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை குடியரசுத் தலைவர் அழைத்து ஆட்சியமைக்கும்படி கோரினார்.
அதன் தொடர்ச்சியாக, தலைநகர் டெல்லியே விழாக்கோலம் பூண்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பல்வேறு நாடுகளின் தலைவர்கள், இந்திய திரைப் பிரபலங்கள், விஐபிக்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று சரியாக இரவு 7.15 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, விழா மேடைக்கு வருகை தந்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து தலைவணங்கி மோடி வணக்கம் தெரிவித்தார். அப்போது அங்கிருந்த மக்கள் எழுப்பிய கோஷம் விண்ணையே அதிர வைப்பதாக இருந்தது. இதையடுத்து, சரியாக 7.24 மணிக்கு குடியரசுத் தலைவர், அரசின் உறுதிமொழிகளை வாசிக்க, பிரதமர் நரேந்திர மோடி அதை திருப்பிக் கூறினார். அப்போது, "நான் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி" என்று பிரதமர் சொன்னதை கேட்டு, அங்கிருந்த பெருங்கூட்டமே "மோடி.. மோடி..." என்று கோஷமிட்டனர்.
இதையடுத்து, தனது உறுதிமொழியை வாசித்த நரேந்திர மோடி, தனக்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் கோப்பில் கையெழுத்திட்டார். அப்போதும் "மோடி.. மோடி.." கோஷம் அடங்கவில்லை. தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதன் மூலமாக, மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அடுத்து, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.