• vilasalnews@gmail.com

மீண்டும் பாஜக ஆட்சிதான்.. இத்தனை தொகுதிகளில் வெல்லுமா? - ரிபப்ளிக் வெளியிட்ட எக்சிட் போல் முடிவுகள்!

  • Share on

மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. ரிபப்ளிக் தொலைக்காட்சி மெட்ரிஸ், பி - மார்க் ஆகியவற்றுடன் இணைந்து எடுத்துள்ள கருத்துக் கணிப்பு நிலவரத்தைப் பார்ப்போம்.

இந்திய நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் தொடங்கிய நிலையில், இறுதிக் கட்டத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று மாலை 6 மணிக்கு முடிந்தது. மொத்தமாக 543 தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

ஏழு கட்டத் தேர்தல்களும் நடந்து முடிந்துவிட்ட நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. ரிபப்ளிக் செய்திச் சேனல் இரண்டு கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

மெட்ரிஸ் (MATRIZE) உடன் ரிபப்ளிக் இணைந்து எடுத்துள்ள கருத்துக் கணிப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353-368 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று கணித்துள்ளது. இந்தியா கூட்டணி 118 - 133 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் மற்ற கட்சிகள் 43-48 இடங்களைக் கைப்பற்றும் என்றும் கணித்துள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 69 - 74 தொகுதிகளில் வெல்லும் என்றும், இந்தியா கூட்டணிக்கு 6 - 11 தொகுதிகளே கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

பி - மார்க் உடன் ரிபப்ளிக் இணைந்து எடுத்துள்ள கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 359 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளது. இந்தியா கூட்டணிக்கு 154 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 30 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. மகராஷ்டிராவில் அதிகபட்சமாக பாஜக கூட்டணி 29 இடங்களிலும், இந்தியா கூட்டணி 19 இடங்களிலும் வெல்லும் என்று கூறியுள்ளது.

அதாவது, இரண்டு கருத்துக் கணிப்புகளிலும் பாஜகதான் மீண்டும் வென்று ஆட்சியைப் பிடிக்கும் அதுவும் கடந்த முறை வென்ற இடங்களை விட அதிகமான இடங்களில் வெல்லும் என்று கணித்துள்ளது.

அதுபோலவே, 49 சதவிகித பெண்களின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளதாகவும், 72 சதவிகித இஸ்லாமியர்களின் வாக்குகள் காங்கிரஸுக்கும் சென்றுள்ளதாகவும் ரிபப்ளிக் கூறியுள்ளது.

  • Share on

கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய ஹெலிகாப்டர் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் அமித்ஷா!

வாரணாசியில் மோடிக்கே டஃப் கொடுக்கும் யார் அந்த அஜய் ராய் தெரியுமா?

  • Share on