மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நெற்றியில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டுவிட்டு திரிணாமுல் காங்கிரஸ் தனித்து களமிறங்குகிறது.
அங்குள்ள 42 தொகுதிகளுக்கும் மம்தா பானர்ஜி தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பிரசாரத்தை அவர் தொடங்கி உள்ளார். இந்நிலையில் தான் மம்தா பானர்ஜி இன்று நெற்றியில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான போட்டோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் ‛‛நம்முடைய தலைவர் மம்தா பானர்ஜி தீவிர காயமடைந்துள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் மம்தா பானர்ஜிக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்த போட்டோவில் மம்தா பானர்ஜியின் நெற்றியில் வெட்டுக்காயம் உள்ளதால் அவரது கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.