உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில், கடந்த 12-ம் தேதி வழக்கம் போல் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக இந்த சுரங்கத்திற்குள் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர். சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் சிக்கிய தகவல் கிடைத்த உடனடியாக மீட்புக் குழுவினர் அங்கு விரைந்தனர். சுரங்கத்தின் இடிபாடுகளில் துளையிட்டு, இரும்பு குழாய்களை செலுத்தி அதன் வழியே தொழிலாளர்களை மீட்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி முதலில் அமெரிக்க எந்திரம் மூலம் இடிபாடுகளில் துளையிடும் பணி தொடங்கி நடந்து வந்தது.
அதில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக மாற்று வழியில் மீட்பு பணிகள் நடந்தது. இந்த பணியிலும் தாமதம் ஏற்பட்டது. எனினும் சிறிய குழாய் ஒன்றை சுரங்கத்திற்குள் அனுப்பி அதன் மூலம் தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்சிஜன் உள்ளிட்டவை குழாய் மூலமாக அனுப்பப்பட்டு வந்தது. இந்த பணியில் தமிழக பணியாளர்களின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பிளான் 'பி' நடவடிக்கையாக, சுரங்கப்பாதையின் மேலிருந்து செங்குத்தாக துளையிடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கிடையில் சுரங்கப்பாதைக்குள் ஆட்களால் துளையிடும் பணியும் தொடங்கியது. அதற்காக "எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்" எனப்படும் சிறிய குகைக்குள்ளும் சென்றும் துளையிடும் அனுபவம் வாய்ந்த 6 சுரங்கப்பணியாளர்கள் குகைப்பகுதிக்கு வந்தனர்.
சுரங்கப்பாதைக்குள் ஆட்களால் துளையிடும் பணியும் தொடங்கி நடந்து வந்தது. 17- வது நாளாக மீட்பு பணிகள் சுரங்கத்தில் நடைபெற்று வந்த நிலையில் பணி இறுதி கட்டத்தை எட்டியது. இதையடுத்து மீட்பு குழு வீரர்கள் குழாய் வழியாக உள்ளே சென்று தொழிலாளர்களை மீட்டு வர சுரங்கத்திற்குள் இறங்கினர். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் ஒவ்வொருவராக அவர்கள் வெளியே அனுப்பி வைத்தனர்.
அதன்படி இரவு 8 மணியளவு முதல் 2 தொழிலாளர்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு தொழிலாளர்களாக மீட்பு குழுவினர் வெளியே அனுப்பி வைத்தனர். 17 நாட்களாக உள்ளே சிக்கி தவித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் தற்போது ஒவ்வொருவராக வெளியே வர தொடங்கியதும் அங்கிருந்த மீட்பு குழுவினர், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஒவ்வொரு தொழிலாளியாக வெளியே வர அவர்களை உடனடியாக தயார் நிலையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். தொடர்ந்து 8.30 மணியளவில் அனைத்து தொழிலாளர்களும் அதாவது சுரங்கத்திற்குள் சிக்கித்தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் அங்கு கூடியிருந்த பலரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஒவ்வொரு தொழிலாளர்களும் மீட்கப்படும் போது உள்ளூர் மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் அங்குள்ள மக்கள் தொழிலாளர்கள் மீட்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும் இது தான் தீபாவளி என்றும் கொண்டாட தொடங்கினர். 17 நாட்களாக சுமார் 410 மணி நேரம் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்கள் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.