சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அய்யன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கார்த்திகை மாதம் 1ஆம் தேதி இன்று பிறந்துள்ளது. இதனால் பல்வேறு கோயில்களில் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை கடைப்பிடிக்க தொடங்கிவிட்டார்கள். முன்னதாக மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது.
அது போல் இன்றைய தினம் மகரவிளக்கு பூஜைகளும் தொடங்குகின்றன. 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடக்கவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
சபரிமலைக்கு ஐயப்பனைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களின் வசதிக்காக புதிய ஆன்லைன் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்கள் தங்களை காத்துக் கொள்ள இந்த செயலி உதவும்.
இந்த செயலியை கொண்டு வனப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், தங்கும் வசதிகள் கிடைக்கும் இடங்கள் ஆகியவற்றை இந்த செயலி மூலம் பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அது போல் பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸாரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தபபடுகிறது. எனினும் கார்த்திகை மாதத்தில் ஐயனை காண பக்தர்கள் செல்கிறார்கள்.
இன்றைய தினம் கார்த்திகை 1 என்பதால் அதிகாலை 3.30 மணிக்கு ஐயனுக்கு நெய் அபிஷேகம் நடந்தது. பின்னர் கோயிலில் மகாதீபம் ஏற்பட்டு மண்டல பூஜை தொடங்கப்பட்டது. இன்று முதல் இனி அதிகாலை 3.15 முதல் மதியம் 12 மணி வரை நெய் அபிஷேகம் தினமும் நடக்கும். இரவு 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மண்டல பூஜைக்கு ஐயப்பனுக்கு 420 சவரன் எடை கொண்ட தங்க அங்கியை திருவிதாங்கூர் மன்னர் காணிக்கையாக வழங்கினார். இது மண்டல பூஜையின் போது அணிவிக்கப்படும்.