டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
தகவல் அறிந்து கட்சியினர் எம்பி வீட்டில் குவிந்து உள்ளனர். இதனால் அந்த பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையுடன் பாஜக செயல்பட்டு வருவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் எம்பி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.