பிரியாணி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அந்த பிரியாணியை யார் சிறந்த சுவையுடன் செய்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க, புதுடில்லி மற்றும் கோல்கட்டாவில் போட்டி நடக்க உள்ளது.
'தாவத் பிரியாணி சாம்பியன்ஸ் லீக்' என்ற பெயரில், பிரபல அரிசி ஆலை நிறுவனமான, 'எல்.டி., புட்' இந்த பிரியாணி போட்டியை நடத்துகிறது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவர் கணபதி சுப்ரமணியம் கூறியதாவது:
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா மற்றும் புதுடில்லியில் பிரியாணி போட்டி நடக்கிறது. இதன் வாயிலாக, அந்தந்த பிராந்தியங்களில் சமைக்கப்படும் சிறந்த பிரியாணிக்குப் பின்னால் உள்ள, தொழில் முறை சமையல் கலைஞர்களை அங்கீகரிக்க விரும்புகிறோம்.
இந்தப் போட்டிக்கு, கோல்கட்டாவில் 150; புதுடில்லியில் 200 சமையல்காரர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் இரு நகரங்களில் இருந்து, தலா ஐந்து பேரை நடுவர் குழு தேர்வு செய்துள்ளது.
இதன்படி, கோல்கட்டாவில் உள்ள ஐ.டி.சி., சோனார் ஹோட்டலில் இன்று இறுதிப் போட்டி நடக்கிறது. இதைத் தொடர்ந்து, வரும் 24ல், புதுடில்லியில் ஐ.டி.சி., ஷெரட்டனில் இறுதிப் போட்டி நடக்கிறது.
இதில் வெற்றி பெறும் சமையல் கலைஞர்களுக்கு, கோப்பையுடன், 51 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.