கொரோனா தொற்று பரவல் காரணமாக, வரும் ஜனவரியில் டெல்லியில் கொண்டாடப்படும் குடியரசு தின விழா அணிவகுப்பை எளிமையான முறையில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ராஜ்பாத்தில் நடைபெறும் இந்த அணிவகுப்பு இந்த முறை நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெருவதாக மத்திய அரசு முடிவு செய்ததாகவும், பல்வேறு குழுக்கள் பங்குபெறும் அணிவகுப்பின் நீளமும் 8.5 கிலோ மீட்டரில் இருந்து 3.5 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதமாக, ஒவ்வொரு படைப் பிரிவில் இருந்தும் 96 வீரர்கள் மட்டுமே பங்கேற்பர்.
அணி வகுப்பில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பில் சிறார்களுக்கு அனுமதியில்லை என்றும் 15 வயதுக்கும் மேற்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.