காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தொடர்ந்து இருக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார். காஷ்மீர் பயங்கரவாத பாதைக்குத் திருப்ப மாநில கட்சிகள் முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வரும் கோரிக்கையுடன் அம்மாநில கட்சிகள் இணைந்து குப்கார் கூட்டணி என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது :
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது. இனிமேலும் தொடர்ந்து அப்படியே இருக்கும். எனவே, தேச நலனுக்கு எதிரான புனிதமற்ற சர்வதேச கூட்டணியை மக்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள்.
அந்த குப்கார் கும்பல், தேசிய மனப்பான்மையுடன் சேர்ந்து நீந்த வேண்டும் அல்லது அதை மக்கள் மூழ்கடித்து விடுவார்கள்.
காங்கிரசும், குப்கார் கும்பலும் காஷ்மீரை பயங்கரவாத பாதைக்கு திருப்பி அழைத்துச் செல்ல விரும்புகின்றனர். 370 வது பிரிவு ரத்து மூலம் மத்திய அரசு உறுதி செய்த சொத்துரிமை, பட்டியலினத்தவர், பழங்குடியினர் உரிமைகளை பறிக்க விரும்புகிறார்கள். அதனால்தான், அவர்கள் எல்லா இடங்களிலும் மக்களால் நிராகரிக்கப்படுகிறார்கள்.
குப்கார் கும்பல் சர்வதேச அளவுக்கு சென்றுவிட்டது. காஷ்மீர் விவகாரத்தில் வெளிநாட்டு சக்திகள் தலையீட்டை கோறுகிறது.தேசியக் கொடியை இழிவுபடுத்துகிறது. இவற்றையெல்லாம் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ஆதரிக்கிறார்களா? தங்கள் நிலைபாட்டை நாட்டு மக்களுக்கு அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.