‘தெரு நாய்களை பிடித்து கொல்வதற்கு மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளதா?’ என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியை சேர்ந்த காமினி கண்ணா என்பவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘டெல்லியில் சமீப காலமாக மக்களை தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டும் என டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, பதிவு செய்யப்படாத தெருநாய்களுக்கு பொறுப்பு ஏற்க யாரும் முன்வர மாட்டார்கள். அதேபோல், பராமரிப்பாளர்கள் உணவு அளிக்காவிட்டால் தெரு நாய்களுக்கு ஒருவேளை உணவு கூட கிடைக்காது.
டெல்லி மாநகராட்சி சட்டம் 399வது பிரிவின்படி, நாய்களை கொல்ல அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இது, அரசியல் சட்டத்தின் 51வது பிரிவு மற்றும் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரானது,’ என்று கூறியுள்ளார்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி சதிஷ் சந்திர சர்மா, நீதிபதி சுப்பிரமணிய பிரசாத் அமர்வு, ‘தெரு நாய்களை கொல்வதற்கு டெல்லி மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளதா? இதில், மத்திய அரசின் நிலைபாடு என்ன என்பது குறித்து பதிலளிக்க வேண்டும்,’ என்று உத்தரவிட்டனர். மேலும், வழக்கை அடுத்தாண்டு பிப்ரவரி 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.