நாடு முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் அடுத்த 3 ஆண்டுகளில் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்தி தரப்பட இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய மோடி, ஒவ்வொரு கிராமத்துக்கும் ஹை ஸ்பீட் பைபர் ஆப்டிக் டேட்டா இணைப்பு 3 ஆண்டுகளில் ஏற்படுத்தி தரப்பட இருப்பதாக தெரிவித்தார்.
உலகில் செல்போன் உற்பத்தி செய்ய மிகவும் உகந்த இடமாக இந்தியா உருவெடுத்து வருவதாக கூறிய பிரதமர், உலகிலேயே வேகமாக வளரும் செல்போன் செயலி சந்தையாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டார்.
இதேபோல் உலகிலேயே இந்தியாவில்தான் செல்போன் அழைப்பு கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக அடிக்கடி செல்போன்களையும், பிற மின்னனு சாதனங்களையும் மாற்றும் கலாச்சாரம் மக்களிடையே உருவாகி இருப்பதாக தெரிவித்த மோடி, இதனால் வீணாகும் எலெக்ட்ரானிக் கழிவுகளை கையாளுவது உள்ளிட்டவற்றுக்காக பிரத்யேக அமைப்பை உருவாக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் திட்டமிட்டபடி 5ஜி சேவை ஆரம்பிக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.