புதிய வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
தமது மாதாந்திர வானொலி உரையான மனதின் குரலின் 71 ஆவது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, கடினமாக உழைக்கும் இந்திய விவசாயிகளின் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என மோடி குறிப்பிட்டார்.
மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களால் நாட்டில் விவசாயம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு புதிய பரிணாமம் கிடைத்துள்ளது என்றார் மோடி.
புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் மீதான கட்டுப்பாடுகள் உடைத்தெறியப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பல புதிய உரிமைகளும், வாய்ப்புக்களும் கிடைத்துள்ளதாக மோடி கூறினார். கொரோனா நிலவரம் பற்றி பேசிய மோடி, கொரோனா பரவி ஓராண்டு ஆவதை சுட்டிக்காட்டினார், ஊரடங்கில் இருந்து வெளியே வந்த பின் தற்போது தடுப்பூசி மீது கவனம் செலுத்தப்படுவதாக அவர் கூறினார்.
கொரோனா குறித்த அலட்சியம் இப்போதும் ஆபத்தை விளைவித்து விடும் என்றார் அவர். கொரோனாவுக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்த உறுதி பூண்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.