விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிப் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லியை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.
அவர்களை டெல்லிக்குள் அனுமதிக்க முதலில் மறுத்த காவல்துறை, பின்னர் புராரி நிரங்காரி மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதித்தது. எனினும் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகள் மைதானத்துக்குச் சென்றனர்.
இந்நிலையில் விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், வேளாண்துறை அமைச்சர் டிசம்பர் மூன்றாம் நாள் விவசாய சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள் நிரங்காரி மைதானத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமித் ஷாவின் வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள் டெல்லியுடனான பிற மாநில எல்லைகளான திக்ரி, சிங்கு, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றம் அருகில் தொடர் போராட்டம் நடத்தவும் திட்டமிட்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.