வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களையெல்லாம் ஆதாரமாக மதிப்பிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தற்காலத்தில் யார் வேண்டுமானாலும் போலியாக வாட்ஸ்அப் மெசெஜ்களை உருவாக்க முடியும் என்பதால் அதனை வலுவான ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளது. இரு நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தம் மேற்கொண்டது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
2016ஆம் ஆண்டு தெற்கு டெல்லி நகராட்சி நிர்வாகத்துடன் A2Z என்ற நிறுவனம் கழிவுப் பொருட்களைச் சேகரிக்கவும், அதை எடுத்துச் செல்லவும் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதையடுத்து 2017ஆம் ஆண்டு இந்நிறுவனம் Quippo என்ற மற்றொரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. மேற்கண்ட பணிகளில் ஒரு பகுதியை மட்டும் Quippo நிறுவனம் செய்வதுதான் அந்த ஒப்பந்தம். இப்பணிக்காக நகராட்சி கொடுக்கும் தொகையை இரு நிறுவனங்களுக்கும் பொதுவாத எஸ்க்ரோ (Escrow) என்ற டிரஸ்டீ என்ற மூன்றாம் தரப்பு வங்கி கணக்கில் செலுத்துவதாகும் உடன்பாடு எட்டப்பட்டது.
அதன்படி பணிகள் செய்துகொண்டிருந்தபோது கடந்தாண்டு ஒப்பந்தம் முடிவையும் முன்பே நிறுத்துவதாக A2Z என்ற நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து Quippo நிறுவனம் கல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடியது. இரு நிறுவனங்களும் ஒப்புக்கொண்டதின் பேரில் நீதிமன்றம் இவ்விவகாரத்தைத் தீர்க்க நடுவர் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. இதனிடையே 8.8 கோடி ரூபாய் நிலுவைத்தொகை தொடர்பாக இரு நிறுவனங்களும் தொடர்புகொண்ட வாட்ஸ்அப் மெசெஜ்களை கோர்ட்டில் Quippo நிறுவனம் சமர்பித்தது. மேலும் 2018ஆம் ஆண்டு இமெயில் மூலம் A2Z நிறுவனம் கொடுத்த ஒப்புதலையும் சமர்பித்தது.
ஆனால் இதை மறுத்த A2Z நிறுவனம் போலி வாட்ஸ்அப் மெசெஜ்கள் என நீதிமன்றத்தில் தெரிவித்தது. இருப்பினும் நீதிமன்றம் A2Z நிறுவனத்திற்கு எதிரான உத்தரவைப் பிறப்பித்தது. இதன் பின்னர் இந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது Quippo நிறுவனம் அதே வாட்ஸ்அப் மெசெஜ் குறித்து வாதம் செய்தது. அப்போது தான் வாட்ஸ்அப் மெசெஜ்களை நம்பகத்தகுந்த ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.