கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடி புனே, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களுக்கு இன்று நேரில் சென்று ஆய்வுகளை மேற்பார்வையிடுகிறார்.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்த நிலையில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பு மருந்துக்கான ஆய்வுகள் பன்னாட்டு மருந்து நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மூன்று ஆய்வுகள் முடிவடைந்து பரிசோதனைகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு பின்விளைவற்ற மருந்துகள் விநியோகத்திற்கு தயாராக உள்ளது.
கொரோனா தடுப்பூசி மருந்துகளை முதல் கட்டமாக 30 கோடிப் பேருக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் , காவல்துறையினர் உட்பட தினசரி பத்து லட்சம் பேருக்கு இந்த மருந்தை விநியோகிக்க அரசு தயார் நிலையில் உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் மருந்து பரிசோதனைகளை நேரில் ஆய்வு செய்ய இன்று காலை 9.30 மணிக்கு பிரதமர் குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்கிறார். அங்கு அவர் Zydus cadila நிறுவனத்தில் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
தொடர்ந்து அவர் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா ஜெனக்கா நிறுவனம் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதை நேரில் காண உள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் செல்ல உள்ள பிரதமர் மோடி அங்குள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில், இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பு மருந்துக்கான முன்னேற்பாடுகளை பார்வையிட உள்ளார்.