நிவர் புயல் கரையை கடந்த பின் வலுவிழந்த சூழலிலும் ஆந்திராவில் கனமழை பெய்து நெல் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
வங்க கடலில் கடந்த 21ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து புயலாகவும், தீவிர புயலாகவும், அதி தீவிர புயலாகவும் வலுப்பெற்றது. இதற்கு ‘நிவர்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது.
இந்த ‘நிவர்’ புயல் புதுச்சேரிக்கும்-மரக்காணத்துக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு கரையை கடக்க தொடங்கியது. புயலின் வெளிப்புறப்பகுதி நேற்று முன்தினம் இரவு 10.45 மணி அளவில் கடக்க தொடங்கிய நிலையில், இரவு 11.15 மணி அளவில் 3-வது வட்டப்பகுதியும் கடந்தது.
அதன் தொடர்ச்சியாக இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை அதி தீவிர புயலின் முழுப்பகுதியும் புதுச்சேரி அருகே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயல் கரையை கடந்த பிறகு அதிகாலை 2.30 மணி அளவில் சற்று வலுவிழந்து, தீவிர புயலாக மாறியது. பின்னர் அது வடமேற்கு திசை நோக்கி நகர தொடங்கியது.
நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ‘நிவர்’ புயல் கரையை கடந்தது. இதன்பின் மேற்கு வடமேற்காக நகர்ந்து, நேற்று காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் வந்தவாசி அருகே நிலைக்கொண்டிருந்தது.
இதன்பின்னர், படிப்படியாக நகர்ந்து பிற்பகல் 2.30 மணியளவில் வேலூருக்கு கிழக்கே மையமிட்டு இருந்தது. இரவு 9 மணி நிலவரப்படி திருப்பதிக்கு மேற்கே நிலைக்கொண்டிருந்தது. இன்று காலையோ, அல்லது மாலைக்குள்ளோ ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வுபகுதியாக வலுவிழக்கிறது.
இதன் தொடர்ச்சியாக ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் சத்தியவேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. வரதைய்யாபாலம் பகுதியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குடியிருப்புகளை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கனமழையால் சில காலனிகளும் நீரில் தத்தளிக்கின்றன. அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என்ற சூழலில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். மக்களை பாதுகாப்பிற்காக நிவாரண முகாம்களுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேபோன்று, ராமசமுத்திரம் பகுதியில் நெல், தக்காளி ஆகியவை பயிரிடப்பட்ட விளை நிலங்கள் மற்றும் பிற பூந்தோட்டங்களும் நிவர் புயலால் கடுமையாக சேதமடைந்து உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.