நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதைத் தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் பீகார் முதல்வராக இன்று (16.11.2020 ) நிதிஷ் குமார் பொறுபேற்றார்.
பீகாரில் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தல் முன்று கட்டங்களாக நடைபெற்றது. இதன் முடிவு கடந்த 10-ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
இந்நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவெடுப்பதற்காக, பாட்னாவில் உள்ள நிதிஷ் குமார் இல்லத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர். முடிவில், நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, ஆளுநர் பாகு சவுகானை சந்தித்த நிதிஷ் குமார், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அத்துடன், எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தையும் வழங்கினார்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தின் முதல்வராக இன்று (16.11.2020) மாலை 4.30 மணிக்கு மேல் நிதிஷ் குமார் பதவியேற்றார். ஆளுநர் பகு சவுகான் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
துணை முதல்வராக பாஜகவின் தர்கிஷோர் பிரசாத் மற்றும் அவரையடுத்து ரேணு தேவி ஆகிய இருவர் பதவியேற்றுள்ளனர். பதவி ஏற்பு விழாவில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர், அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிதிஷ் குமார் தொடர்ந்து 4 வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
நிதிஷ்குமார் முதல்வராக பதவி ஏற்றாலும் அதிக எம்.எல்.ஏக்களைக் கொண்ட கட்சி என்பதால் ஆட்சியின் கடிவாளம் பாஜகவிடமே இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.