இயற்கைக்கு பிறகு படைப்பாற்றல் கொண்ட இறைவிகளுக்கு
மகளிர் தின கடைசி வாழ்த்து!
மெல்லினமே எப்போது வல்லினம் ஆவாய்!
பெண்கள் தினத்தை இன்று பெரிதாய்
கொண்டாடும்
எனதருமை சகாக்களே!
வலிகளை மட்டும் சுமந்து வந்த இனத்திற்கு
வழிகாட்டும் ஒருநாள்
வாக்குரிமை
வாழும் உரிமை
கல்வி பெறும் உரிமை
என தவழ்ந்து நடக்கும்
குழந்தை போல
நாம் கிடந்து தவிக்கையில்
நம் கரம் தொட்டு தூக்கி
உரிமைகள் பெற்று தந்த நீதிக் கட்சியும்,திராவிட இயக்கங்களும்
நம் வணக்கத்திற்கு உரியவர்கள்
தேவதாசி என்ற பொட்டு கட்டும் முறைக்கு
பாடை கட்டி ,தேவை என்றால் உங்கள் வீட்டு பெண்ணை அனுப்புங்கள் என்ற சட்டமன்றத்தில் குரல் எழுப்பிய சிங்கப் பெண்மணி டாக்டர் முத்து லட்சுமி ரெட்டியும் இன்று நினைக்கப் பட வேண்டும்
கோலம் போட
சமையல் செய்ய
குனிந்து பணிந்து
நடக்க கற்று தரும் அம்மாக்களே
இனியாவது கொஞ்சம் ரவுத் திரத்தையும் கற்று கொடுங்கள்
நாங்கள் போடுகின்ற உடைதான் பாலியல் அத்து மீறல்களுக்கு
காரணம் என வாய் கிழிய பேசிடும்
வக்கிர புத்திகாரர்களே
இரண்டு வயது குழந்தை என்ன உடை போட்டது ...
நிமிர்ந்த நடை
நேர்கொண்ட பார்வை
நிலத்தில் எவருக்கும் அஞ்சாத நெறி
இனி காகிதத்தில் மட்டும் அல்ல
நம் கருவிலேயே ஊட்டப் பட வேண்டும் ..
சீதை களாய் இருந்து நெருப்பில் இறங்கி நிரூபித்தது போதும்
கண்ணகியாய் மாறி
கடைக் கண்ணால்
எரித்து விடுங்கள்
ஒடுக்கப்பட்டு மரணம் எய்திய அனிதா க்களும்
நிராகதியாய் மரணித்த நிர்பயாக்களும்
கடைசியாக இருக்கட்டும்
இந்த மண்ணின் கடைசி ஆணுக்கும் நம் மகத்துவம் தெரியும் வரை கொண்டாடி தீர்ப்போம்
மகளிர் தினத்தை
மெல்லினமாக அல்ல
வல்லினமாக !
ஜா.ஜான் சுந்தர ராஜா