தமிழக அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு அசைவையும் தம் விரல்களில் வைத்திருந்த முத்தமிழ் அறிஞர். அரை நூற்றாண்டு கால தமிழக அரசியலின் தலைப்புச் செய்தி, 5 முறை முதல்வர் , 13 முறை சட்டமன்ற உறுப்பினர், தான் சந்தித்த தேர்தல்களில் தோல்வியே கண்டிராத வைரவிழா நாயகர், 50 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்திய அண்ணாவின் அன்புத்தம்பி, ஈழத்தமிழர் நலனுக்காக தன் ஆட்சியை துச்சமென எண்ணி தூக்கியெறிந்த திராவிட சூரியன், இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதி காத்த சமத்துவச் செம்மல், மக்கள் நல திட்டங்கள் பல தந்த தமிழினத் தலைவர், தமிழருக்காகவும் தமிழகத்திற்காகவும் தன் வாழ்நாள் எல்லாம் முழங்கிய முரசொலி.
இரவலாகப்பெற்றிட்ட தன் அண்ணாவின் இதயத்தை திருப்பித்தந்து வங்கக்கரையோரம், ”ஓய்வில்லாமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற வாசகத்தினூடே இளைப்பாறிக்கொண்டிருக்கிறார் தன் தமிழினத்தையும், கழக உடன்பிறப்புகளையும், மு.க.ஸ்டாலின் எனும் தலைவன் வழிநடத்துவார் எனும் நம்பிக்கையோடு.
இப்படித்தான் ஒலித்து கொண்டிருக்கிறது கடைக்கோடி திமுக தொண்டனின் குரல்
மதுரையில் சாலப்பொருத்தமான இடத்தில் திமுக தலைவர் கலைஞரின் சிலை அமைக்கப்பட்டு நாளை திறப்பு விழா காண்கிறது.
தேர்தல் மூலம் சில நேரம் செங்கோலை கைவிட்டாலும் தம் வாழ்வின் இறுதி வரை எழுதுகோலை கைவிடாத அவருக்கு உற்ற நண்பனாம் புத்தகங்களுக்கு அருகில் மாவட்ட மைய நூலகம் அருகில் அவர்தம் சிலை அமைந்துள்ளது.
தமிழினத்தின் ஒப்பற்ற அந்த தலைவரின் சிலை அமைந்துள்ள சாலையில் தான் நான்காம் தமிழ்ச்சங்கமும் ,அவர் தம் ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களும் காட்சி தருகின்றது. தமிழக காவல் துறைக்கு தன்னிகரற்ற திட்டங்கள் தந்த அவர்தம் சிலைக்கு பின்னால் காவல் நிலையம் ,இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில்களுக்கு திட்டங்கள் தந்த அவர்தம் சிலைக்கு பின்னால் விநாயகர் கோவில், இதனை எல்லாம் விட மதுரையில் கழகத்தை தம் உயிர் மூச்சாக வளர்த்தெடுத்த முன்னாள் மாவட்ட செயலாளர் தமது சொந்த நிதியில் கட்சி அலுவலகம் அமைத்து தந்த கலைஞரின் அன்பை பெற்ற மதுரை தாவூத் இல்லம் அமைந்துளளதும் இப்பகுதியில் தான்,
அரசியல் உலகில் இன உணர்வும், மொழி உணர்வும் கொண்டு மாணவர்கள் போராட்ட களத்தில் குதித்து சட்ட நகலை எரிப்பதற்கு வித்திட்ட இடமும், திமுக கொடி கம்பங்கள் வைக்க வைக்க வெட்டப்பட்ட போதும் சளைக்காமல் கட்சிக்கொடி கம்பங்கள் வைத்ததோடு தேநீர் கடையை மட்டும் ஆதாரமாக கொண்டு இயக்கம் வளர்த்தெடுத்த கலைஞரின் அன்பு இளவல் மதுரை முத்துபிள்ளை போன்றோரும் கழகப் பணி ஆற்றிய இடத்தில் சிலை அமைந்துள்ளது.
பொதுவெளியில் அமைக்கப்படுகின்ற கலைஞரின் முதல் சிலை என்ற பெருமை மதுரைக்கு கிடைத்துள்ளது. ஏனென்றால் கலைஞர் சிலைக்கென்றே தனித்த ஒரு வரலாறு உண்டு.
சென்னை அண்ணாசாலையில் இருந்த கலைஞர் சிலையை கடப்பாரையைக் கொண்டு சேதப்படுத்தியதுடன், சிலையை இடித்துத் தள்ளினார்கள். அந்தப் புகைப்படம் அதற்கு அடுத்தநாள் பத்திரிகைகளில் வெளியானது. இதைப்பார்த்த கலைஞர், அப்போது முரசொலி பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்...
``உடன்பிறப்பே,
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்தச் சின்னத் தம்பி
என் முதுகில் குத்தவில்லை,
நெஞ்சிலேதான் குத்துகிறான்
அதனால் நிம்மதி எனக்கு!
இப்படி மிகப்பெரிய தடைகளையும் தம் சாதுர்யத்தால் கடந்து சென்ற கலைஞரின் சிலை திமுக தொண்டர்களுக்கு மட்டுமின்றி மதுரை மக்களுக்கும் தனித்த அடையாளமாய் இருக்கப்போவது நிச்சயம்.