பிரிட்டிஷ் கிழக்கிந்திய ராணுவத்தில் அதிகாரியாக இருந்த ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ். இவர் 1790 முதல் 1848 வரை பிரிட்டிஷ் கிழக்கிந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். இந்திய வரலாற்று ஆய்வுகளில் இவரது ‘Military Reminiscences’ புத்தகம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
1830இல் வெளியிட்ட ‘Military Reminiscences - இராணுவ நினைவுகள் ’ என்ற புத்தகத்தில், நான் அறிந்ததிலேயே மிகவும் அசாதாரணமான ஒரு மனிதர், ஊமைத்துரை தான் - one of the most extraordinary mortals i ever knew என்று கூறியுள்ளார்.
மேலும், ஊமைத்துரை உயரமானவர் ஒல்லியான இளைஞர். நெருக்கடியான சூழலில் தனது சிந்தனை ஆற்றலை வெளிப்படுத்தி எப்போதும் விஞ்சி நிற்பார். முஸ்லீம்களால் அவர் மூக்கா என அழைக்கப்பட்டார். இந்துக்கள் அவரை ஊமைத்துரை என்று அழைத்தனர். அவர் விஷயத்தில் எங்களுக்கு தொடர் தோல்வியே ஏற்பட்டது. மக்கள் ஊமைத்துரையை சாமி என்றே அழைத்து தெய்வமாக வழிபட்டனர். அவரது சிறு சைகைகளைக் கூட தெய்வ வாக்காக கருதினர்.
அவரது தலைமையின்றி எந்த அவையும் கூட்டப்படவில்லை. அவர் எந்த ஆணையிட்டாலும் அதை அனைவரும் உடனே சென்று நிறைவேற்றினர். அவரது தலைமை ஏற்காமல் எந்த வீரதீரச் செயலும் நடைபெறவில்லை.
எங்களை ( ஆங்கிலேயர்) ஒழிப்பதற்கு போடப்பட்ட திட்டங்கள் அனைத்திற்கும் அவரே ( ஊமைத்துரை) தலைமையேற்று நடத்தினார். அவர் தோன்றிய இடங்களில் எல்லாம் புரட்சிகள் தோன்றின. ஊமைத்துரையின் சிறிதும் தன்னலம் கருதாத தூய்மையான நாட்டுப் பற்று அவரை தூக்கு மேடைக்கு அனுப்பியது.
"He was at last doomed to grace a gallows, in reward for the most disinterested and purest partriotism" . எங்களது வீரர்கள் அந்தப் புகழ்பெற்ற தளபதியை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டார்கள் ஆனால் அவர் எல்லாத் தருணங்களிலும் அதிசயமாக தப்பி விடுவார் என்று பிரிட்டிஷ் கிழக்கிந்திய ராணுவத்தில் அதிகாரியாக இருந்த ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ் குறிப்பிடுகிறார்.
தமிழறிஞர் மா.பொ.சிவஞானம் எழுதிய "கயத்தாற்றில் கட்டபொம்மன்" என்ற நூலில், “வீரபாண்டிய கட்டபொம்மனை விட ஊமைத்துரையே ஆங்கிலேயரை எதிர்த்து அதிகம் போராடினார்” என்று கூறுகிறார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வரி ஒழுங்காகக் கட்டவில்லை, கலெக்டர் அழைத்த போது சந்திக்க மறுத்தார், சிவகிரியாரின் மகனுக்கு ஆதரவாகப் படைகள் அனுப்பினார், மேஜர் பானர்மேன் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டுச் சரணடையாமல் எதிர்த்து போரிட்டார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு, அக்டோபர் 16ம் தேதி 1799 அன்று கயத்தாரில் உள்ள புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
அதன் பின், அவரது தம்பி ஊமைத்துரை மற்றும் சிவத்தையா உட்பட பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த முக்கியமான நபர்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
1800ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கட்டபொம்மனை தூக்கிலிட்ட மேஜர் பேனர்மேன் ஐரோப்பாவுக்கு திரும்பினார். அதன் பின்னர் மேஜர் ராபர்ட் டூரிங் வந்தார். பிறகு அந்த இடத்திற்கு மேஜர் காலின் மெக்காலே வந்தார்.
இந்த மேஜர் மெக்காலே தான், ஊமைத்துரை மற்றும் அவரது படைகளுக்கு எதிராக இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சி போரின் முதல்கட்ட தாக்குதலில் ஆங்கிலேயப் படைகளை வழி நடத்தினார்.
ஊமைத்துரை மற்றும் அவரது சகாக்கள் பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பியது குறித்து தனது நூலில் விவரிக்கும் ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ், 1801ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி, பாளையங்கோட்டையிலிருந்து சுமார் முப்பது மைல் தொலைவில் உள்ள சங்கரநாயனார்கோவிலில் எங்கள் படை முகாமிட்டிருந்தது. சுமார் இருபது ஆங்கிலேய பெண்கள் மற்றும் ஆண்கள், மேஜர் மெக்காலே வீட்டு விருந்தில் இருந்தனர்.
அதுமட்டுமல்லாது அப்போது சின்னம்மை பரவல் இருந்ததால், அபாயகரமான கைதிகளின் இரும்பு கை விலங்குகளை அகற்றியிருந்தோம். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி பாளையங்களைச் சேர்ந்த கைதிகள், தங்களது படையினரை வரவைத்து, காவலர்களைத் தாக்கி தப்பினர். பல நாட்கள் தீட்டப்பட்ட திட்டம் இது. விடிவதற்கு முன் அவர்கள் பாஞ்சாலங்குறிச்சியை அடைந்துவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாளையங்கோட்டையில் இருந்து தப்பிய பிறகு, ஊமைத்துரையின் படை ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம் , காடல்குடி, நாகலாபுரம், கோலார்பட்டி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளைக் கைப்பற்றியது. பின்னர் அவரது தலைமையில், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வெறும் 6 நாட்களில் 5000 வீரர்களை கொண்டு மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. என்று ஆங்கிலேயே அரசு தெரிவிக்கின்றன.
ஆறு நாட்களில் மிகவும் வலிமையான ஒரு கோட்டை பாஞ்சாலங்குறிச்சியில் உருவானது ஏதோ அதிசயம் போல எங்களுக்கு தோன்றியது என ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ் தனது ‘Military Reminiscences’ புத்தகத்தில் கூறுகிறார்.
தூத்துக்குடி, மானாமதுரை, கமுதி மணப்பாச்சேரி, திருக்காட்டூர், சிவகங்கை, சிறுவயல், காளையார் கோவில், திண்டுக்கல், கன்னிவாடி, சத்திரப்பட்டி, பிரான்மலை, விருப்பாச்சி, வத்தலகுண்டு, ஆனைமலை, தாராபுரம், உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கும்பகோணம் என்று தென்னிந்தியாவில் மிகப்பெரிய கிளர்ச்சியை பாளையக்காரர்களை ஒன்றினைத்து ஏற்படுத்தி ஆங்கிலேயர்களின் முகாம்களை தாக்கி தீ வைத்து எரித்து தங்களது பலமான எதிர்ப்புகளை காண்பித்தலில் முக்கிய பங்காற்றியவர் ஊமைத்துரை.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல நாட்களுக்கு போர் செய்த பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான ஊமைத்துரை இறுதியில், நவம்பர் 16, 1801ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டார். இன்று அவரது நினைவு தினம்.