இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். அதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் தேசப்பிதா மகாத்மா காந்தி என்ற ஒற்றை மனிதர். மட்டுமே' மகாத்மாவின் நினைவுநாளான இந்நாளில் அவரது நினைவுகளை மறவாமல் போற்றுவோம்
உலக அரங்கில் இந்தியாவை ஜனநாயக நாடாக மலரச் செய்த பெருமை அவருக்கு மட்டுமே உரியதாகும். ஜனநாயகம் என்றால் மக்கள் ஆட்சியாகும். மக்களின் விருப்பப்படியே அரசியல் அமைப்பு அதிகாரம் இருக்கவேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம். மதங்களைக் கடந்த மனிதத்தை நேசித்தார் மகாத்மா. அதன்படி இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக்க விரும்பினார். அதில் வெற்றியும் கண்டார். இந்தியாவில் பல்வேறு மதத்தினர் வேற்றுமையிலும் ஒற்றுமை உணர்வுவோடு வாழ்ந்து வருகின்றனர்.
மதவழிபாடு என்பது தனிமனித உரிமையாகும். அவரவர் விருப்பம்போல் எந்த மதத்தையும் தழுவிக்கொள்ளலாம். அதற்கான உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெற செய்வதற்கு முன் உதாரணமாக திகழ்ந்தார் நம் தேசப்பிதா. பல்வேறு மதத்தினர், இனத்தினர், மொழிபேசுபவர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றபோதிலும், அனைவரும் இந்தியரே.
ஒன்றுபட்ட இந்தியாவில் வசிக்கும் அனைவரும் சகோதரர்களே என்று ஆணித்தரமாக வலியுறுத்தினார் அண்ணல் காந்தி. மதநல்லிணக்கம் ஒன்றே ஒன்றுபட்ட இந்திய மக்களின் ஒற்றுமைக்கு வலுசேர்க்கும் என்பதில் அவர் தீர்க்கமாக இருந்தார். பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவுக் கரம் நீட்ட மறுத்துவிட்டார். இந்து -முஸ்ஸிம் ஒற்றுமைக்காக ஓங்கி குரல்கொடுத்தார். ஆயினும் முகமது அலி ஜின்னாவின் பிடிவாதத்தால், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்து செல்லும் சூழல் நேரிட்டது. ஆயினும், அண்ணலின் அன்பால் ஈர்க்கப்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் பலரும் பாகிஸ்தான் செல்ல விரும்பாமல் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர்.
'மதநல்லிணக்கம்' இன்றளவும் இந்தியாவில் உயிர்ப்புடன் இருப்பதற்கு நம் தேசப்பிதா மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலே மூலகாரணமாகும். அகிம்சையின் ஆணிவேராக திகழ்ந்த அண்ணல் காந்தி, நாடு விடுதலை அடைந்து ஓராண்டுக்குள்- அதாவது 1948 - ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் கோட்சே எனும் கொடியவனால் சுடப்பட்டு, துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார். மகாத்மாவின் மரணத்தை ஏற்கமுடியாமல், இந்திய மக்கள் அனைவரும் இடிந்து போயினர். நாடே கண்ணீர் விட்டு கதறியது. அப்போது, அன்றைய இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், " இந்திய விடுதலைக்காக எங்களை எதிர்த்து குரல் கொடுத்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கு உரிய பாதுகாப்பை நாங்கள் கொடுத்தோம் ; அவரது உயிருக்கு உத்தரவாதம் அளித்தோம் ; ஆனால், அவரை நாங்கள் கொல்லவில்லை ; இந்திய அரசு அவரைப் பாதுகாக்க தவறிவிட்டது என்று ஆதங்கப்பட்டார்.
அது என்னவோ மறுக்கமுடியாத உண்மைதான். சர்ச்சிலின் இந்தப் பேச்சால் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பலரும் கூனி குறுகி போயினர். மகாத்மாவின் மரணம் விடுதலை இந்தியாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என்றே மக்கள் கருதினர்.
அன்றைய அரசியல் தலைவர்களும் தலைகுனிந்து நின்றனர். நாட்டு விடுதலைக்காக அரும்பாடுபட்டு, சிறைவாசம் அனுபவித்த காந்திஜி, அறவழிக் கொள்கையின் மூலம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆகமொத்தத்தில், அடிமை விலங்கொடித்த அண்ணல் காந்தி, அறவழியில் இந்திய விடுதலையைப் பெற்றுத்தந்தார் . அவரது அகிம்சை எனும் அறவழிக் கொள்கைக்கு உலக நாடுகள் பலவும் தலைவணங்கியது.
ஐ.நா.வும் மகாத்மா காந்தியின் கொள்கையான அறவழியைப் பின்பற்றுமாறு உலக நாடுகளுக்கு இன்றளவும் வலியுறுத்தி வருகிறது. "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பார்கள் , அதுபோல, அண்ணலின் அறவழி அகிலமெல்லாம் பரவியதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா பயணமே அதற்கு சாட்சியாகும். கலாம் அந்நாட்டு அதிபர் நெல்சன் மண்டேலாவைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவரிடம், "தங்கள் நாட்டு விடுதலைக்காக 27ஆண்டுகள் கொட்டடி சிறையில் தனிமைப்படுத்தப் பட்டீர்கள், அதிலும், பல இடையூறுகள், துன்பங்கள், துயரங்களுக்கு மத்தியில் எப்படி சிறையில் காலம் கழித்தீர்கள். அதற்கான பொறுமை தங்களுக்கு எப்படி வந்தது" என்று ஆச்சரியத்தோடு கேட்டார் . அதற்கு, "உங்கள் தேசத் தந்தை மகாத்மா கற்றுக்கொடுத்த அகிம்சை எனும் கொள்கைதான்" என்று பெருமிதத்துடன் கூறினார், மண்டேலா.
காந்தியின் அறவழி கொள்கை அகிலமெல்லாம் பரவியதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. அதன் மூலம் காந்தியின் உடலை துளைத்தெடுத்த கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகள் அனைத்தும் அவரது கொள்கையின் முன்னால் தோற்றுப் போய்விட்டன என்பதுதான் வாழ்வியல் உண்மையாகும்.
தமிழ்நாடு அரசு காந்திக்கு அவரது தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது. மதுரையில் இராணி மங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் 1959 முதல் காந்தி அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கரையில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் மார்பளவு சிலை ஒன்று வளாகத்திலும், மற்றொன்று அருங்காட்சியகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் பேர்கள் அமரக்கூடிய அளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமும் நூலகமும் இங்குள்ளது.
அகிம்சை எனும் அறவழியானது உலககெங்கும் பரவுவதற்கு ஆணிவேராக திகழ்ந்த மகாத்மா, இம்மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது கொள்கையின் மூலம் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்று மகாத்மாவின் நினைவுநாள். இந்நாளில் அவரது நினைவுகளை மறவாமல் போற்றுவோம்.