இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரரான மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்த தினம் இன்று.
வீரபாண்டிய கட்டபொம்மன் தன் வாழ்வில் தன் மரியாதையும் உரிமையையும் விட்டுக் கொடுக்காமல், ஆதிக்க ஆளுமைகளை எதிர்த்து வீர வாழ்வு வாழ்ந்தார். இலட்சியத்திற்காக போராடும் வீரர்கள் எல்லாம் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள். இன்றும் மனித சமுதாயத்தில் ஒவ்வொரு போராட்டத்திலும் பல கட்டபொம்மன்களை காண முடிகிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற சொல் வீரத்திற்குரிய இலக்கணமாக இந்த சமுதாயத்தில் நிலைத்து நிற்கிறது. மனித சமூகம் உள்ளளவும் அது நிலைத்து நிற்கும்.
எங்கெல்லாம் அடக்கு முறையும் ஆதிக்க வெறியும் தலை விரித்து ஆடுகிறதோ அங்கெல்லாம் வீரபாண்டிய கட்டபொம்மன் தோன்றி கொண்டே இருப்பார்கள். அன்று பல பாளையக்காரர்கள் மானம் சிறிதன எண்ணி வாழ்வு பெரிதென்று கொண்டு, ஆங்கில அரசின் ஆணைக்கு அடிபணிந்து ,போர் கருவிகளை ஒப்படைத்து, கோட்டைகளை இடித்து நடைபிணங்களாக வாழ்ந்தனர். ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மனும், ஊமை துரையும் உரிமையை இழந்து, அடிமையை வாழ மறுத்து எதிர்த்துப் போரிட்டு வீரச் சாவினை தழுவினர்.
மனித குலத்தார் அனைவருக்கும் சாதி மதம், இனம் இவற்றிற்கு அப்பாலும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அது அரசியல் நீதிக்கும் சமூக நீதிக்குமான லட்சிய போராட்டமாகும். அந்தப் பாதையில் எடுத்த அடியும் பிடித்த கொடியும் வெடித்த குரலுமாய் நின்று இன்னுயிர் நீத்த தியாக சீலர்களை அவர்களது நாடு என்றும் மறக்காதே. ஏனென்றால் ஒரு நாட்டின் வரலாறு, லட்சிய வீரர்கள் நெஞ்சில் ஏந்திய உயர்ந்த எண்ணங்களாலேயே உருவாக்கப்பட்டது. இவர்கள் வாழ்ந்த வாழ்வே அர்த்தமுள்ள அழியாய் புகழுடைய வாழ்வாகும். வீரபாண்டிய கட்டபொம்மன் இத்தகைய வாழ்வையே வாழ்ந்தார். அதனால் தான் நூற்றாண்டுகள் கடந்தும் இன்னமும் வாழ்ந்து வருகிறார். இன்று அவருக்கு 265 வது பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறார்.
புகழ் வாய்தோரைப் பற்றி பழிப்புரை கூறினால் அதனை அகிலம் வியப்போடு நோக்கும் என்று எண்ணி, அதனை முதலாக வைத்து எழுதப்பட்ட வணிக எழுத்துக்களும், வாடகை வாய்களும் இச் சமூகத்தில் இன்னமும் இருக்கத்தாய் செய்கின்றன. அதனால் கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்றும் பழிதூற்றுகின்றனர். காரிருளால் கதிரவன் தான் மறைவதுண்டோ? என்பதை கட்டபொம்மனை பழிதூற்றுபவர்கள் எண்ணிக்கொள்ள வேண்டும்.
மண்ணில் இன்பங்களை விரும்பாத விடுதலை மாண்பினை உயிரென மதித்த வீரபாண்டிய கட்டபொம்மன் ஊமைத்துறை ஆகியோர் பண்பினை இளைய தலைமுறைக்கு உணர்த்தி அதன்மூலம் நியாயங்களுக்கான கரத்தையும், குரலையும் உயர்த்தும் உணர்வை சமுதாயத்தில் வளர்ப்பது நமது கடமையாகும். வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் ஓங்கட்டும்.