வாழ்க்கை என்பது நாம் வாழ்தலுக்கான மிக நீண்ட நெடிய தூர பயணம். இந்த பயணத்தில் நமக்கு ஏதேனும் நோக்கம், லட்சியம் இருக்க வேண்டும். அப்பொழுது தான் இந்த பயணத்திற்கான தேவை நிறைவேறும்.
எந்த ஒரு இலக்குகளும் இல்லாமல் பயணப்படுவதால் நிகழப்போவது என்ன? ஆகவே வாழ்க்கை என்னும் பயணத்தில் நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு இலக்கு, லட்சியத்தோடு பயணப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் பயணம் அர்த்தப்படும். வாழ்க்கை முழுமையாகவும் சிறப்பாகவும் நிறைவுபெறும்.
தன்னுடைய லட்சியம், தேவை, எதிர்பார்ப்பு ஆகியவற்றிற்காக ஒரு செயலை முன்னெடுக்கும் போது அதில் வெற்றி வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லா மனிதனுக்குள்ளேயும் வரக்கூடிய இயல்பான முதன்மை எண்ணங்களாகும். அத்தகைய வெற்றிக்கு எதிரான தோல்வி என்ற நிகழ்வை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் போது, வெற்றியை நோக்கி எதிர்பார்த்து எடுத்துவைத்த அனைத்து செயல்களும் வீண் என்பது போலவும், எட்ட முடியாமல் போன அந்த வெற்றி இனி நம்மால் எட்டவே முடியாது என்பது போலவும் எண்ணங்களை உருவாக்கி, ஒன்றை நோக்கி முன்னெடுத்த செயல்களை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தி விடுவதும், அல்லது அதிலிருந்து விலகிச் செல்வதுமாக பலர் உள்ளனர்.
ஆனால், வெற்றி என்பது எப்படி ஒரு நிகழ்வோ அது போல தோல்வி என்பதும் ஒரு நிகழ்வுதான். இந்த இரண்டுமே எதிலும் எவருக்கும் நிரந்தரமல்ல என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் இதுதான் காலம் நமக்கு சொல்லும் வேதம்.
குருசேத்திரப் போரில் அர்ஜுனனின் காண்டீபத்தை எவருமே எதிர்கொள்ள முடியவில்லை. அப்பேர்ப்பட்ட அர்ஜுனன் கிருஷ்ணன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு துவாரகை செல்கிறான். அங்கிருந்த பெண்களை அஸ்தினாபுரத்திற்கு அழைத்துக் கொண்டு வருகிறான். வரும் வழியில் கள்வர்கள் கூட்டம் இவர்களை தாக்குகிறது. கோபத்துடன் காண்டீபத்தை ஏந்திய அர்ஜுனனால் கள்வர்களின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. சர்வசாதாரணமாக அவனது காண்டீபத்தை பிடுங்கி எறிந்து அவனையும் அடித்து வீழ்த்தி விட்டு அவர்கள் கொள்ளையடித்துச் சென்று விடுகின்றனர்.
பீஷ்ம, துரோண, கர்ணன்களையே வீழ்த்திய அவனது வீரம் எங்கே போயிற்று? கேவலம் ஒரு கொள்ளைக் கூட்டத்தை அவனால் சமாளிக்க முடியவில்லையே அது ஏன்? குருசேத்திரப் போருக்காக அந்த ஆற்றல் அவனுக்கு வழங்கப்பட்டது போர் முடிந்ததுமே அந்த ஆற்றல் தீர்ந்துவிட்டது அத்துடன் அந்த ஆற்றல் காலாவதியாகிவிட்டது.
குருசேத்திரப் போரில் அர்ஜுனனின் காண்டீபத்தை எவருமே எதிர்கொள்ள முடியவில்லை. அதில் காண்டீபத்தை சர்வ சாதாரணமாக ஒரு கொள்ளைக் கூட்டம் பிடுங்கி எரிந்து அவனையும் அடித்து வீழ்த்தி விட்டது. ஆக, காண்டீபத்தின் வலிமையும் அர்ஜுனனின் வீரமும் ஓர் இடத்தில் வெற்றியை நிகழ்த்தியது, மற்றொரு இடத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. ஆகவே வெற்றி, தோல்வி என்பது மாற்றத்திற்கு உள்ளாகும் நிகழ்வே தவிர, யாருக்கும் எதற்குமான முடிவான நிகழ்வு அல்ல!
உயிரினங்களில் படிப்படியான பரிணாம வளர்ச்சியின் உன்னத நிலை எட்டியது மனிதப்பிறவி மட்டுமே. ஆகவே ஒரு மனிதன் நினைத்தால், அவன் நினைத்த எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி எட்டமுடியும்.
வாழ்வின் ஒவ்வொரு நொடியும், மனிதன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தான் எதற்காக படைக்கப் பட்டானோ அதை நோக்கியே அவன் செல்கிறான் அல்லது செலுத்தப்படுகிறான் இது மட்டுமே உண்மை. எனவே, வெற்றி இறுதியல்ல...தோல்வி நிரந்தரமல்ல!
தன்னம்பிக்கையோடு இன்றைய நாள் போல, எந்நாளும் நடைபோடுங்கள்!