
எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த், அடுத்ததாக "மிஸ்டர் எக்ஸ்" எனும் படத்தை இயக்கியுள்ளார். இதில், ஆர்யா, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சுவாரியார், அனகா, அதுல்யா ரவி, ரைஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது, திபு நிணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஆர்யா பேசுகையில்:-
இயக்குநர் மனு ஆனந்த் எல்லாவற்றிலும் பர்பெக்சன் ஆக இருக்கக்கூடியவர். எந்த ஒரு காட்சியையும் அழகான முன்கூட்டிய திட்டமிடலுடன் படமாக்கினார். அதனால் தான் திட்டமிட்டதை விட அதிக நாட்கள் எடுக்க வேண்டிய படத்தை சரியான நேரத்திற்குள் எடுத்து முடித்தார். இந்தப் படத்திற்காக மும்பையில் தண்ணீருக்கு அடியில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது அப்போது என்னுடன் சேர்ந்து ஒளிப்பதிவாளரும் தண்ணீருக்குள் டைவ் அடித்து இந்த காட்சிகளைப் படமாக்கினார். இப்படி ஒரு ஒளிப்பதிவாளரை பார்ப்பது ரொம்பவே அரிது. ஆக்சன் படம் என்பதால் இசை ரொம்பவே முக்கியம். இசையமைப்பாளர் திபு நிணன் அந்த அளவிற்கு இந்த படத்திற்கு தனது ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளார்.
படம் முழுவதுமே ஒரு ஆக்சன் மூடு இருக்கும். நிறைய ஆக்சன் காட்சிகள் இருக்கின்றது. கவுதம் கார்த்திக் ரொம்பவே கூலான, அதேசமயம் ஒரு செக்ஸியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக ஸ்டைலிஷான ஒரு நடிப்பை அவர் கொடுத்துள்ளார். நானும் மனு ஆனந்தும் பேசும்போது கூட தம்பி கலக்கிட்டான் என்று தான் அவரது நடிப்பைப் பற்றி கூறுவோம். இந்த கதாபாத்திரத்தை தமிழில் இவரைத் தவிர வேறு யாருமே பண்ண முடியாது என்பது போல சரத்குமாருக்கு என அளவெடுத்து தைத்த சட்டை போன்று அவரது கதாபாத்திரம் அமைந்துவிட்டது. சிங்கிள் ஷாட்டில் ஒரு ஆக்சன் காட்சியில் அவர் நடித்திருந்தார். இப்படி எல்லாம் இந்த வயதில் பண்ண முடியுமா என பிரமித்துப் போனேன் என்றார்.
நடிகர் கவுதம் கார்த்திக் பேசும்போது:-
இந்தப் படம் நான் எதிர்பார்த்ததை விட நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளை எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து உருவாக்கலாம். ஆனால் அதில் நடிப்பவர்களை பாதுகாப்பதில் சில்வா மாஸ்டர் மிகுந்த அக்கறை காட்டினார். கிளைமாக்ஸில் நடக்கும் இறுதிச் சண்டைக் காட்சிக்காக ரைஸா, அனகா, அதுல்யா ரவி ஆகியோர் கடுமையாக ரிகர்சல் செய்ததை பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன். மஞ்சு வாரியருடன் முதல் காட்சியில் நடிக்கும் போது அவரைப் பார்த்து பிரமித்துப் போய் அப்படியே நின்று விட்டேன்.
தூத்துக்குடியில் நடைபெற்ற படபிடிப்பின் போது, அங்கு மழை வெள்ளம் ஏற்பட்டது. அப்போது இன்று சூட்டிங் இருக்காது என நான் நினைத்துக்கொண்டிருக்க, ஆர்யா பிரதர் வாக்கிங் போயிட்டு இருக்கார். ஜிம் எங்க இருக்குன்னு கேட்கிறார். தன்னுடைய வேலையில் எவ்வளவு நேர்த்தியாக ஆர்யா இருக்கிறார் என்று நான் நேரில் பார்த்து வியந்ததில் இதுவும் ஒன்று என்றார்.