
விஜய் டி.வி யின் காமெடி கேடி அறந்தாங்கி நிஷாவுக்கு அறிமுகம் அவசியமில்லை. பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்தவர். காமெடி எங்க ஏரியா என்று ஆண்கள் கட்டிய அரணைத் தகர்த்து, அதிரடியாக உள்ளே புகுந்தவர்.
சென்னையில் ஆரம்ப காலத்தில் முஸ்லீம்னா வீடு இல்லை என்று அறந்தாங்கி நிஷாவுக்கு வீடு கொடுக்க மறுத்த சம்பவங்களை இன்ஸ்டா பக்கத்தில் நினைவு படுத்தியுள்ள நிஷா, தற்போது சென்னையில் ஒரு படுக்கை அறை கொண்ட வீடு ஒன்றை வாங்கி பால் காய்ச்சியுள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
உங்க எல்லாரோட ஆசிர்வாதத்தோட சென்னையில் வீடு வாங்கி பால் காய்ச்சியுள்ளேன். வீட்டுக்கு என் தந்தையின் பெயர் தான் வச்சிருக்கேன். நான் பொறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் எனக்கு சென்னையில் சொந்தக்காரங்கன்னு யாரும் கிடையாது.
இப்போது, நான் சென்னையில பயணிக்கிறதுக்கு காரணம் என்னுடைய அப்பாவும் என்னுடைய தமிழும்தான். சென்னைக்கு வந்த புதியதில் ஆறு மாசமா வீடு தேடினேன். ஆர்டிஸ்ட்டுக்கு வீடு தர மாட்டேன். முஸ்லிம்க்கு வீடு தர மாட்டேன் இப்படி எத்தனையோ பிரச்னைகள். இப்போ, இந்த ஊரிலேயே வீடு வாங்கியாச்சு. எப்பவுமே எல்லார் முன்னாடியும் நம்ம ஜெயிக்கிறதை விட; நம்ம எங்க தோக்குறமோ அந்த இடத்தில்தான் ஜெயிச்சு காட்டனும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.