
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் நாளை 24.01.2025 அன்று வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து தகவலை இந்த தொகுப்பில் காண்போம்
குடும்பஸ்தன்
ஜெய் பீம், குட்நைட் மற்றும் லவ்வர் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள குடும்பஸ்தன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. என்னுடைய முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையாக படம் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களை பொருத்திக் கொள்ளும் கதையாக குடும்பஸ்தன் இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் நிச்சயம் என்ஜாய் செய்யலாம் என்கிறார் படத்தின் நாயகன் மணிகண்டன்.
சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் இந்த படத்தினை நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டனுடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.
பாட்டில் ராதா
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் , மாறன் மற்றும் பலர் நடித்திருக்கும் "பாட்டில் ராதா" திரைப்படம்.
குடி நோயாளியான குரு சோமசுந்தரம், மறு வாழ்வு மய்யம் என்று சொல்லக்கூடிய ரீயாப் செண்டரில் படும் வேதனைகள், கொடுமைகள், இறுதியில் நலம் பெற்று குடும்பத்துடன் இணைந்தாரா இல்லை குடி நோயாளியாகவே வாழ்ந்து தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டாரா என்பதை உணர்வு பூர்வமாகவும், காதல், காமெடி, எதார்த்தம் என எல்லாம் கலந்து சொல்லிருக்கும் படம் தான் பாட்டில் ராதா
வல்லான்
இளம் தொழிலதிபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை, துப்பு கிடைக்காமல் திணறுகிறது. இதனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சுந்தர்.சி யிடம் உயர் அதிகாரி வழக்கை ஒப்படைக்கிறார். பணியில் இல்லை என்றாலும், தொழிலதிபர் கொலை வழக்கின் பின்னணியில், தனது தனிப்பட்ட பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கலாம் என்ற நோக்கத்தில் விசாரணை மேற்கொள்ளும் சுந்தர்.சி, பல மர்ம முடிச்சுகள் அவிழ்த்தாலும், அடுத்தடுத்த கொலைகளால் மேலும் பல மர்மங்கள் அவரை சூழ்கிறது. இதனிடையே கொலை செய்யப்பட்டவரிடம் இருக்கும் ஏதோ ஒன்றுக்காக அரசியல்வாதியும், சில காவல்துறை அதிகாரிகளும் அவருக்கு எதிராக சதி செய்ய, அவைகளை முறியடித்து கொலையாளியை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார்? கொலைக்கான பின்னணி மற்றும் இந்த வழக்குடன் தொடர்புடைய அவரது பிரச்சனை என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடையை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சொல்வதே ‘வல்லான்’.
கட்டப்பாவை காணோம் என்ற படத்தை இயக்கிய மணி செய்யோன் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். சுந்தர் சி யுடன் தன்யா ஹோப், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார்.
மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்க வைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்து, தமிழ் சினிமாவில் நுழைந்தார். பிரன்ட்ஷிப், கூகுள் குட்டப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்த இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை பிரபல முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸின் 101வது படமாக இப்படம் உருவாகியுள்ளது. இளமை ததும்பும் இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி உள்ளது இப்படம்
குழந்தைகள் முன்னேற்ற கழகம்
சகுனி படத்தை இயக்கிய இயக்குநர் சங்கர் தயாளுவின் குழந்தை முன்னேற்றக் கழகம் படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக சங்கர் தயாளுவின் மகன் அத்வைத் உள்பட ஹரிகா படேடா, இமயவர்மன், மாஸ்டர் பவாஸ் நடித்துள்ளனர்.
யோகி பாபு, செந்தில் முக்கியக் கதாபாத்திரங்களாக நடித்துள்ள இந்தப் படத்தில் அகல்யா, லிஸி ஆண்டனி, சித்ரா லட்சுமணன், கோவிந்த மூர்த்தி, சரவணன், சுப்பு பஞ்சு நடித்துள்ளனர். மீனாட்சியம்மன் மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை (ஜன. 24) வெளியாகிறது.சாதக பறவைகள் சங்கர் இசை அமைத்துள்ள இந்தப் படம் குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து, அரசியல் காமெடி வகைப் படமாக உருவாகியுள்ளது.
பூர்வீகம்
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த போஸ் வெங்கட் தனது மகன் கதிரை விவசாயத்தில் ஈடுபடுத்தாமல் நன்றாக படிக்க வைத்து, அரசு அதிகாரி ஆக்கஆசைப்படுவதோடு, கிராமத்து சொந்தங்களை உதறிவிட்டு நகர வாழ்க்கையில் தனது மகனை ஈடுபடுத்திட விரும்புகிறார். அவரது ஆசைப்படி, அவரது மகனும் நன்றாக படித்து அரசு அதிகாரியாவதோடு, வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு, சென்னையில் சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.
தனது ஆசைப்படி தன் மகன் வாழ்க்கையில் உயர்ந்து விட்டாலும், ஒரு தந்தையாக போஸ் வெங்கட்டினால் மகனின் மகிழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போவதோடு, அவரிடம் உரிமையாக உறவாட முடியாத சூழலும் ஏற்படுகிறது. நகர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன் மகனையே இழக்கும் நிலைக்கு தள்ளப்படும் போஸ் வெங்கட்டின் நிலை மாறியதா? பூர்வீகத்தை விட்டுவிட்டு படிப்புக்காகவும், பணிக்காகவும் நகர வாழ்க்கையில் ஈடுபட்டு, தனது பெற்றோரையே மறந்துபோகும் மனநிலைக்கு ஆளான கதிர், மனம் மாறினாரா? இல்லையா? என்பதை இளைய சமுதாயத்தினருக்கான வாழ்வியல் பாடமாக சொல்வதே ‘பூர்வீகம்’
பிரைன் டச் பிலிம் பேக்டரி சார்பில் இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதிர், போஸ் வெங்கட், மியா ஸ்ரீ, இளவரசு, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாணக்யா இசையமைத்துள்ளார். விஜய் மோகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.