
துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட போது அஜித்குமார் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. காரின் முன்பகுதியும் பின்பகுதியும் சேதமடைந்த நிலையில், அஜித்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கார் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சியும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முதன்மை நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் புதிதாக ரேஸிங் நிறுவனம் தொடங்கியுள்ள நிலையில், அந்த அணியானது துபாயில் நடக்கின்ற கார் ரேசில் பங்கேற்க உள்ளது. இதற்கான கார் ரேஸ் பயிற்சியானது கடந்த 30ம் தேதி முதல் துபாயில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில்,,ஐரோப்பிய துணைக்கண்டத்தில் பல்வேறு நாடுகளில் இந்த கார் ரேஸ் போட்டியானது நடைபெற இருக்கிறது.
இதற்கான முதல் தொடர் போட்டியானது துபாயில் வரும் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் அஜித்குமாரின் நிறுவனம் சார்பில் அணி பங்கேற்க இருப்பதால், இதற்கான பயிற்சி துபாயில் நடந்து வந்தது. இதற்காக இன்று நடிகர் அஜித்குமார் துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது அவரது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாறுமாறாக ஓடிய அவரது கார் தடுப்புச் சுவர் மீது மோதி சுழன்றடித்தது. இதில் காரின் முன்பகுதியும், பின்பகுதியும் நொறுங்கியது. எனினும் நல்ல வாய்ப்பாக அஜித்குமாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இது தொடர்பான சிசிடிவி காட்சியும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அப்போது அஜித்குமார் ஓட்டிச்செல்லும் கார் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து வருகிறது. திடிரென தடுப்புச்சுவரில் மோதில் கார் அப்படியே சுழன்றடித்து நிற்கிறது. உடனே அங்கிருந்த ஒருவர் அஜித்குமாரை காரில் இருந்து வெளியே அழைத்து செல்கிறார். நடிகர் அஜித்குமாரும் சாதாரணமாக நடந்து செல்கிறார்.
நடிகர் அஜித்குமார் கார் விபத்தில் சிக்கியது என்று தெரிந்ததும், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதை அறிந்த பின் தான் நிம்மதி அடைந்துள்ளனர்.