கடந்த சில தினங்களாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் நயன்தாரா - தனுஷ் இடையேயான பிரச்சனை தான்.
நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று ( நவ.,18 ) நயன்தாரா பியாண்ட் தி பேரி டேல் என்ற தலைப்பில் ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த ஆவணப்படத்தின் டிரைலரில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடித்தான் திரைப்படத்தின் சின்ன காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது.
அந்த சின்ன காட்சி வீடியோவிற்காக தனுஷ் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு தன் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பால் பழிவாங்குகிறார் என நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விவகாரம் தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகி பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில் தான், தனுஷ் - நயன்தாரா பிரச்சனை குறித்து பலரும் பேசி வர, ஆர்.ஜே.பாலாஜிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, நானும் அதை இணையத்தில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.
ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்கு கொண்டாட்டம் என்பதுபோல ஏதோ ஒன்று நடக்கிறது. அனைவரும் பார்க்கிறோம், அதைப்பற்றி பேசுகிறோம். இதில் கருத்து தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை, தனுஷே இதற்கு பதில் சொல்லவில்லை, நாம் என்ன சொல்ல, அவர்கள் இருவருமே அதை பேசிக்கொள்வார்கள் என கூறியுள்ளார்.