மூத்த திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக உயிர் இழந்தார். அவருக்கு வயது 81. விமானப்படையில் வேலை செய்த அவர் திரையுலகிற்கு வந்து தன் அபார நடிப்பால் ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்தவர். இந்நிலையில் அவரை டெல்லி கணேஷ் என அழைக்க காரணம் என்ன தெரியுமா? வாங்க பார்ப்போம்.
இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கத்தில் கடந்த 1976ஆம் ஆண்டு வெளியான பட்டின பிரவேசம் என்ற படத்தின் மூலம் நடிகரானவர் நெல்லையை சேர்ந்த டெல்லி கணேஷ். சிறந்த குணச்சித்திர நடிகர் என பெயர் எடுத்தவர்.
81 வயதான டெல்லி கணேஷுக்கு, கடந்த மூன்று நாட்களாக உடல்நலக்குறைவு இருந்தது. இந்நிலையில், நேற்று இரவு சென்னை ராமாபுரத்தில் இருக்கும் தன் வீட்டில் தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்துவிட்டது.
இன்று காலையில் எழுந்ததும் டெல்லி கணேஷின் மறைவு செய்தி அறிந்து வேதனையாக இருக்கிறது என்கிறார்கள் திரையுலகினர். டெல்லி கணேஷ் படங்கள் தவிர்த்து டிவி சீரியல்களிலும் நடித்தவர். காமெடி கதாபாத்திரம், வில்லன் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அற்புதமாக நடிக்கும் திறமை வாய்ந்தவர்.
நடிகர் டெல்லி கணேஷ் எடுத்த எடுப்பிலேயே சினிமாவுக்கு வந்துவிடவில்லை. முதலில் அவர் விமானப்படையில் தான் தன் கெரியரை துவங்கினார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியில் விமானப்படையில் இருந்தார். இந்த காரணத்தால் தான் அவரை அனைவரும் டெல்லி கணேஷ் என அழைக்கிறார்கள்.