மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட "அமரன்" படம், சூரரைப் போற்று படத்தைப் போலவே, உண்மைச் சம்பவங்களை திரித்துள்ளது என்று முன்னாள் ராணுவ வீரர் உள்பட பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு பதில் அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பதில் அளித்துள்ளார்
இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினெண்ட் கர்னலும், அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத்தின் துணைத் தலைவருமான தியாகராஜன் அமரன் படம் குறித்து கூறுகையில்,
"ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்த தமிழரான மேஜர் முகுந்த் வரதராஜன் தனது தந்தையை அப்பா என்றுதான் அழைத்தார். ஆனால், படத்திலோ அவரை நைனா என்று அழைப்பது போல காட்சியமைத்து, அவரது பிராமண அடையாளத்தை மறைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு வீரனின் உண்மையான கதையை, திராவிட இயக்க கண்ணோட்டத்தில் பார்ப்பது அவரது பின்னணியையும் உண்மையான குணத்தையும் புறக்கணிப்பதாகும். முகுந்த் போன்ற உண்மையான வீரர்கள் உண்மையான சித்தரிப்பைத்தான் பெற வேண்டும். திரிபு செய்து கதையை உருவாக்குவது சரி அல்ல.
இந்திய ராணுவத்தின் உண்மையான நாயகர்களைப் பற்றிய படங்களை தயாரிக்க ஒப்புதல் அளிப்பதற்கு முன், படக் குழுவினருக்கு எந்த மறைமுக நோக்கமும் இல்லாததை, இந்திய ராணுவ மக்கள் தொடர்பு பிரிவு நன்கு உறுதி செய்ய வேண்டும். தேசத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்கள், வெளிப்படையான மரியாதைக்குரிய சித்தரிப்பைத்தான் பெற வேண்டும். அவர்கள் பிறப்பை மறைக்க தேவையில்லை. அவர்களை மறைமுக நோக்கங்களுக்காக மாற்றியமைப்பது சரியாகாது.
ஒருவரின் சுயசரிதை அவரது வாழ்க்கையை உண்மையாக சித்தரிக்க வேண்டும். இவர்களின் கருத்தியலுக்காக அவரது பிராமண பின்னணியை குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. சூரரைப் போற்று 'ஏர் டெக்கான்' நிறுவனத்தை நிறுவிய கேப்டன் கோபிநாத்தின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம் ஆகும். கோபிநாத் பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்கிற போதிலும், திரைப்படத்தில் அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவராக காட்டப்பட்டிருப்பார். அதே போலத்தான், தமிழகத்தில் இன்னொரு பயோ-பிக் படமாக அமரனும் வலிந்து திரிக்கப்பட்ட காட்சிகளோடு வந்திருக்கிறது என்று முன்னாள் ராணுவ வீரர் தியாகராஜன் கூறினார்.
இதுபோன்ற தொடர் விமர்சனங்களுக்கு படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசன் பதில் அளிக்கவில்லை. இருப்பினுன், படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி விழா மேடையில் நேரடியாகவே பதில் அளித்துள்ளார். இதுகுறித்து கூறும் போது, "தனது அப்பாவை, தினம், தினம் செல்லமாக நைனா, நைனா என்று அழைக்கும் மேஜர் முகுந்த் வரதராஜன், அதேபோல் தினமும் செல்லமாக ஸ்வீட்டி என்று முகுந்தால் அழைக்கப்படும் கீதா, ஆகிய இருவரும் என்னிடம் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?
முகுந்த் எப்போதுமே தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே ஆசைப்படுவான். அவன் வந்து தன்னுடைய சர்டிபிகேட்டில் கூட எந்த குறியீடும் இருக்கக்கூடாது என்று நினைப்பான். ஆகவே அவனுக்கு இந்தியன், தமிழன் என்ற அடையாளத்தை மட்டும் ஆர்மிமேனாக இந்த படத்தில் கொடுங்க என்று அவரது குடும்பத்தார், என்னை ம.முதல் மீட்டிங்கிலேயே கேட்டுக் கொண்டனர்" என்று ராஜ்குமார் பெரியசாமி கூறினார்.