சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி நடிகர் விஜய்யை பற்றி பேசிய விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவரும், தமிழ் சினிமாவின் தளபதியாக ரசிகர்கள் மனதில் வலம் வருபவரான நடிகர் விஜய் தற்போது தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். எச்.வினோத் இயக்கும் இப்படம் தான் விஜய்யின் கடைசி திரைப்படமாகும் என்கின்றனர். அதன் பிறகு நடிப்பில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கின்றாராம் விஜய். கடந்த பிப்ரவரி மாதமே விஜய் தன் அரசியல் என்ட்ரியை அதிகாரபூர்வமாக அறிவித்தார். அப்போதே நடிப்பில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தார்.
தனது ஒரு படத்திற்கு 200 கோடிக்கு மேல் சம்பளமாக வாங்கும் விஜய், தென்னிந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்கிறார். இந்தநிலையில், விஜய் நடிப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்தது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பலரும் விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இருந்தாலும் விஜய் தன் முடிவில் இருந்து பின்வாங்கப்போவதாக தெரியவில்லை.
இந்நிலையில் தான், அவரின் கடைசி திரைப்படமாக சொல்லப்படும் தளபதி 69 அவருக்கு மிகப்பெரிய ஒரு வெற்றிப்படமாக அமையவேண்டும் என்பது தான் அவரது ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது. மேலும் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் ஆயிரம் கோடி வசூலை பெறவில்லை. ஆகவே விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை பெற்று சாதனை படைக்க வேண்டும் என்பதும் விஜய் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
இன்று விஜய்யின் படங்கள் எல்லாம் ஒரே நாளில் நூறு கோடி வசூலை பெறுகின்றது. ஆனால், இதற்கெல்லாம் அடித்தளம் போட்டது துப்பாக்கி திரைப்படம் தான் என்கின்றனர். துப்பாக்கி திரைப்படம் தான் விஜய்யின் முதல் நூறு கோடி திரைப்படமாம். அதன் பின் தான் விஜய்யின் மார்க்கெட் மளமளவென உயர்ந்தது. அந்த துப்பாக்கி படத்தில் விஜய் நடித்தால் தான் சரியாக இருக்கும் என முதல் ஆளாக கூறியவர் யார் என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. அவை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. அந்த சமயத்தில் துப்பாக்கி கதையை ஏ.ஆர் முருகதாஸ் ராஜ்குமாரிடம் கூறியுள்ளார். கதையை கூறிவிட்டு இந்த கதையில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் கேட்டுள்ளார். உடனே சற்றும் யோசிக்காமல் விஜய்க்கு தான் இந்த கதை பொருத்தமாக இருக்கும் என ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளாராம்.
பின்னர், சில நாட்கள் கழித்து எஸ்.ஏ சந்திரசேகர் ஏ.ஆர் முருகதாசிற்கு போன் போட்டு ஏதாவது கதை இருக்கா என கேட்க, அவரும் துப்பாக்கி கதையை கூற அதன் பிறகு தான் இப்படம் நடந்ததாம். ராஜ்குமார் பெரியசாமி விஜய்க்கு துப்பாக்கி கதை செட்டாகும் என கூறிய ஒரு சில நாட்களிலேயே எஸ்.ஏ சந்திரசேகரிடம் இருந்து போன் வந்தது ஏ.ஆர் முருகதாசிற்கு ஆச்சர்யமான விஷயமாக இருந்ததாம். இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.