தமிழ் சினிமாவின் சமூக நீதி பேசும் திரைப்படங்கள் மூலம், தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநராகத் திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்கள் சமூக நீதி பேசும் படங்களாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்த இயக்குனர் மாரி செல்வராஜ். ஏற்கனவே இந்த பகுதியில் பரியேறும் பெருமாள், மாமன்னன் ஆகிய படங்களை படப்பிடிப்பு நடத்தியுள்ளார். இந்த படங்கள் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து வாழை என்ற படமும் கருங்குளம் பகுதியில் படமாக்கப்பட்டது. இந்த படம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், அப்ளஸ் நிறுவனமும் (Applause Entertainment), நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து 'பைசன் காளமாடன்' படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் பிரபல கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும், பைசன் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்திற்காக, நடிகர் துருவ் விக்ரம் பல மாதங்களாகக் கபடி விளையாட்டு பயிற்சி மேற்கொண்டார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், இயக்குநர் பா.ரஞ்சித், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை பற்றியும், அவர்கள் சந்தித்த வலிகளையும் தன்னுடைய கடந்த படங்களில் தத்ரூபமாகப் படமாக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படமும் சமூக நீதி பேசும் சிறந்த படமாக இருக்கும் என ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இப்படத்தின் பெயர் குறித்த அறிவிப்பைப் புகைப்படத்துடன் கூடிப் பதிவாகவும், "கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்…" என்கிற வாசகத்துடன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.