நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்திலிருந்து கலர்ஃபுல்லான போஸ்டர் ஒன்று வெளியானது. வேட்டையன் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இந்த சூழலில் ரஜினிகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் தலைவர் ஓபனா போட்டு உடைச்சிட்டாரே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
ரஜினிக்கு வயதானாலும் தன்னுடைய மகள் வயது ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்கிறார்; டூயட் பாடுகிறார்; அதையெல்லாம் பார்க்க ஒரு மாதிரி இருக்கிறது. ஹிந்தியில் எப்படி அமிதாப் பச்சன் வயதான பிறகு அந்த வயதுக்கு தகுந்த ரோல்களை செய்கிறாரோ அதேபோல்தான் ரஜினியும் செய்ய வேண்டும் என்று ஓபனாகவே பேசினார்கள். குறிப்பாக சிவாஜி படத்தில் ஸ்ரேயா, லிங்கா படத்தில் சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா என அவர் டூயட் பாடியதை வைத்து கிண்டலும் செய்தனர்.
அந்த சமயத்தில் ரஜினிகாந்த்தே அதுகுறித்து பேசியிருக்கும் வீடியோ இப்போது ட்ரெண்டாகியுள்ளது. லிங்கா பட விழாவில் பேசிய அவர், "லிங்காவில் சோனாக்ஷி சின்ஹாவுடன் ரொமான்ஸ் செய்வது எனக்கு ரொம்பவே சவாலானதாக இருந்தது. முதன்முறை நான் கேமரா முன் நின்றபோதுகூட அந்த அளவுக்கு நான் பதற்றப்படவில்லை. என்னை போல 60 வயது நடிகருக்கு கடவுள் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை என்னவென்றால் அது டூயட் பாடுவதுதான். ஓடும் ரயிலில் சண்டை செய்வதை விட சோனாக்ஷியுடன் டூயட் பாடுவது எனக்கு ரொம்பவே வேதனையாக இருந்தது.
என்னுடைய முதல் படமான அபூர்வ ராகங்கள் பட ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்யும்போதுகூட நான் அவ்வளவு டென்ஷனாக இல்லை. சோனாக்ஷியை நான் ஒரு குழந்தையைப்போல்தான் பார்த்திருக்கிறேன். என்னுடைய மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யாவுடன் ஒன்றாக விளையாடி வளர்ந்தவர் அவர். அதேபோல் தான் அனுஷ்காவுடன் டூயட் பாடும்போதும் உணர்ந்தேன்"" என்றார். இள வயது ஹீரோயின்களுடன் டூயட் பாட ரஜினிக்கு விருப்பம் இல்லை இயக்குநர்கள்தான் அவ்வாறு சீன்களை வைத்தார்கள் என்பதை இப்போவாது புரிஞ்சுக்கங்க என ரஜினி ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.