தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் என்ன தான் புது புது படங்களைப் பார்த்தாலும், தியேட்டரில் அமர்ந்து கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக விசில், கைத்தட்டிக் கொண்டு படம் பார்த்தால் பலருக்கு படம் பார்த்த திருப்தியே இருக்கும். ரசிகர்களின் இந்த பல்சை நன்றாக புரிந்து கொண்ட சினிமாக்காரர்கள் வாரா வாரம் புது புது படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஜனவரி பண்டிகை மாதம் என்பதால், பாண்டிகை விடுமுறைக்காக பல ஆண்டுகளாக வெளியிடமாமல் வைத்திருந்த படங்களும் தற்போது ரிலீசுக்கு வந்துள்ளது. பொங்கல் விடுமுறையை கணக்கில் கொண்டு வசூலை அள்ளும் நோக்கோடு முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக மோத உள்ளது. கமலின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா, ரஜினியின் லால் சலாம் ஆகியவற்றை எதிர்பார்த்த நிலையில் அவற்றின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் உள்ளதால், பொங்கலுக்கு என்ன படம் வெளியாக உள்ளது என்று பார்க்கலாம்.
சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார். சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் இந்த மாதம் வெளியாக உள்ளது.
இன்று நேற்று நாளை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பெரும் கவனம் ஈர்த்த ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தியாவின் முதல் ஏலியன் படமாக அயலான் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் விஜய் சேதுபதி, கத்ரினா கையில் இணைந்து நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் படம் வரும் ஜனவரி 12ம் தேதி வெளியாகவுள்ளது. டிசம்பர் மாதத்தில் இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளவைக்கப்பட்டு தற்போது வெளியாக உள்ளது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இந்தப் படத்தில் முதன்முறையாக கத்ரினா கையிப்புடன் இணைந்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் அவரது மார்க்கெட் மேலும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டோலிவுட் ஸ்டார் மகேஷ்பாபுவின் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துகாத்திருக்கும் திரைப்படம் குண்டூர் காரம். திரி விக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு உடன் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதிபாபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஆந்திராவின் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12 அன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் டிரைலரை படக்குழு நேற்று வெளியிட்டது.
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான். தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளனர். இப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 12 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.
மாலிவுட்டின் மூத்த நடிகரான ஜெயராம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஆபிரகாம் ஓஸ்லர். இப்படத்தை மிதுன் மானுவல் தாமஸ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜெயராம், அனஸ்வர ராஜன், அனூப் மேனன், ஜெகதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளார். ஜெயராமின் அதிரடியான நடிப்பில் உருவாகி உள்ள இத்திரைப்படம் ஜனவரி 11ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.