கலைஞரின் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதுதான் ஹைலைட் என சொல்லப்படுகிறது. விழாவில் நடிகர் ரஜினி வெளிஉலகுக்கு அருந்திடாத கலைஞர் உடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
கலைஞர் பேச்சில் தெனாலிராமனின் நகைச்சுவை இருக்கும், சாணக்கியனின் தந்திரம் இருக்கும், பாரதியாரின் கோபம் இருக்கும் என தனக்கே உரித்தான பாணியில் கலைஞரின் பேச்சாற்றலை புகழ்ந்து தள்ளினார் ரஜினி.
எழுத்து ஒரு இயற்கை சக்தி. எழுத்து இல்லன்னா அரசியல்ல. அரசாங்கம் இல்லை என்றவர், கலைஞர் கிட்ட எழுத்து சக்தி இருந்ததாகவும் அவர் எழுதிய கடிதங்களை தான் படித்திருப்பதாகவும் கூறினார். சில கடிதங்களை படிக்கும் போது கண்ணுல கண்ணீர் வரும் என்ற ரஜினி, சில கடிதங்களை படிக்கும் போது கண்ணுல நெருப்பு வரும் என கலைஞரின் எழுத்தாற்றலை புகழ்ந்தார். இப்படி கலைஞரின் எழுத்தையும் அவர் எழுதிய வசனங்களையும் பேச்சையும் பலவாறாக வியந்து பாராட்டினார் ரஜினி.
பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், நடிகர், பன்முகம் கொண்டவர் என நபர் ஒருவருக்கு மறைமுக அறிமுகம் கொடுத்த ரஜினி, கலைஞரை விமர்சித்தே பத்திரிக்கை நடத்தியவர் அவர் என பீடிகையை கூட்டினார். தொடர்ந்து கலைஞரை எவ்வளவு விமர்சனம் பண்றேன், ஆனா எங்க பார்த்தாலும் என்னையா எப்படி இருக்குன்னு கேட்கிறார் என்று அந்த நபர் தன்னிடம் நிகழ்ந்து போய் சொன்னதாக ரஜினி கூற, அனைவரும் அவர் யாராக இருப்பார் என ஆர்வத்தோடு அனைவரும் யூகித்து கொண்டிருந்த தருணத்தில், அந்த சஸ்பென்ஸை தானே உடைத்த ரஜினி, அது வேற யாரும் இல்ல என்னுடைய நண்பர் சோ தான் என்றார்.
ஒரு தேர்தலில் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதாக ஒரு நடிகர் பத்திரிகைகளில் கூற, அது பெரும் பேசு பொருளாக மாறியதாகவும் ரஜினி குறிப்பிட, அந்த நடிகர் யாராக இருக்கும் என அறிந்து கொள்ள ரசிகர்கள் ரஜினியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தொடர்ந்து பேசிய ரஜினி, இதனால் கலைஞர் முகத்தில் எப்படி முழிப்பது என தெரியாமல் குளிர் காய்ச்சல் எனக் கூறி பிரிவியூவுக்கு செல்லாமல் அந்த நடிகர் தவிர்க்க நினைத்ததாகவும், அப்போது பொய்யை உணர்ந்த கலைஞர், சூரியன் பக்கத்துல வந்து உட்காருங்க குளிர் ஒன்றும் செய்யாது என்று கூறி நினைவுகளை பகிர்ந்த ரஜினி, அது வேற யாரும் இல்ல நான் தான் என்று கூறினார்.
ஒருமுறை சத்திய சாய்பாபா கலைஞரை நேரில் வந்து சந்தித்ததை மேடையில் நினைவு கூர்ந்த ரஜினி, உங்களுக்கு ஆண்டவன புடிக்காது ஆனா ஆண்டவனுக்கு உங்களை பிடிக்கும் என கலைஞரிடமே சொன்னதாகவும் கூறினார்.