• vilasalnews@gmail.com

'கழுவேத்தி மூர்க்கன்' தோலுரிக்கும் சாதி அரசியல் - திரைவிமர்சனம்

  • Share on

இராமநாதபுரம் மாவட்டம், தெக்குப்பட்டி கிராமத்தில், சிறு வயதில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது மேலத் தெருவை சேர்ந்த படத்தின் நாயகன் அருள்நிதியை மாடு முட்ட, கீழத் தெருவில் வசிக்கும் சந்தோஷ் பிரதாப் அவரை காப்பாற்ற இருவருக்குமான நட்பானது சாதி பேதமின்றி இணக்கமாகி தொடங்குகிறது.


தனது சாதிக் கட்சியில் மாவட்ட செயலாளராக இருக்கும் ராஜசிம்மன் தனது செல்வாக்கை அந்த மாவட்டத்தில் அதிகரிக்க பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த முயற்சிக்கிறார். அதற்கு முன்னதாக  தனது மாவட்டத்திற்கு வருகை தரும் கட்சியின் தலைவரை வரவேற்று தெக்குபட்டி கிராமத்தில் வைக்கப்பட்ட பேனர் கிழிப்பட்டு இருக்கிறது. அதனை கண்ட கட்சியின் தலைவர் கோபமடைந்து திரும்ப செல்ல, அதன்பின் ராஜசிம்மனின் மாவட்ட செயலாளர் பதவியும் பறிபோகிறது.


இதனால் இதற்கு காரணமாக இருக்கும் கீழத்தெரு சந்தோஷ் பிரதாப்பை பழிவாங்க துடிக்கும் ராஜசிம்மன் ஒருபுறமும், இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ராஜசிம்மனிடம் தனக்கு சேர்மன் பதவிக்கு  போட்டியிட தேர்தலில் சீட் பெற அருள்நிதியின் அப்பாவும், முன்னாள் தெக்குபட்டி ஊராட்சி மன்ற தலைவருமான யார் கண்ணனும் செய்யும் சாதி வன்னமம் நிறைந்த செயலில்,  


கீழத்தெரு சந்தோஷ் பிரதாப் கொலை செய்யப்பட அந்தப் பழி அவரது நண்பர் மேலத்தெரு அருள்நிதி மீது விழுகிறது. அதன் பின் தனது நண்பர் சந்தோஷ் பிரதாப்பின் கொலை பின்னணியில் உள்ள சாதி வெறியர்களை கண்டுபிடித்து அவர்களைப் பழிக்குப் பழியாக கொலை செய்வதும், அதில் தன்னை பெற்ற அப்பாவையும் பாரபட்சமின்றி விட்டு வைக்காமல் கொலை செய்கிறார். 

சாதியை வைத்து மட்டுமே அரசியல் செய்யும் அரசியல்வாதிகள், சுய சாதி கௌரவம் தான் முக்கியம் என திரிபவர்கள், இங்கு பிறக்கும் எல்லா உயிர்களும் சமம் என நினைக்காத சிந்தனை கொண்டவர் என அனைத்து கொடிய மனித மிருங்கள் எல்லோரும் கழுவேற்றி கொல்லப்பட வேண்டியவர்கள் தான் என்பதை சொல்கிறது 'கழுவேத்தி மூர்க்கன்' 


இயக்குனர் சை கௌவுதம் ராஜ், சாதி கடந்த நட்பு, ஒரு அழகான காதல், சுய சாதி துரோகம், சாதியை வைத்து மட்டுமே அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்,  என கருத்துடன் கூடிய ஒரு கமர்ஷியல் படத்தை ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார். தான் சொல்ல வரும்  விஷயத்தை அழகாகவும் ஆழமாகவும் திரைக்கதை அமைத்து, அதற்கான காட்சிகளை பிசுறு இல்லாமல் நேர்க்கோட்டில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். மேலத் தெரு, கீழத் தெரு நட்பானது மட்டும் கொஞ்சம்  'இராவணக் கோட்டம்" திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது.

மூர்க்கசாமி கதாபாத்திரத்தில் அப்படியே தன்னை பொருத்திக் கொண்டுள்ளார் அருள்நிதி. அந்த முறுக்கிய கிடா மீசையோடு, கண்களை உருட்டி, எதிராளிகளை எட்டி உதைத்து, தூக்கிப் போட்டு மிதிப்பது என ஆவேசத்தின் எல்லைக்கே செல்லும் அருள்நிதி, தனது காதலி  துஷாரா விஜயன் கண்ணை ஒரு நிமிடம் கூட நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தோற்றுப் போகும் காதல் தொடக்கும் அருமை.


நாயகி துஷாரா விஜயன்  அருள்நிதியுடனான காதல் காட்சிகளில் ரொமான்ஸ் நடிப்பு அசத்தல் அழகு. இறுதி கட்ட காட்சிகளில் அருள்நிதிக்கு முத்தம் கொடுத்து அவர் பேசும் வசனம் கண்ணைக் கலங்க வைத்துவிடுகிறது.


அருள்நிதியின் நண்பராக சந்தோஷ் பிரதாப். கீழத் தெருவைச் சேர்ந்த அவர் தன் மக்கள் அனைவருமே படித்து முன்னேற வேண்டும் என அவர்களுக்காக பல நல்ல விஷயங்களைச் செய்து அவர்களை ஆளாளுக்கும் விதம், சொல்லி கொடுக்கும் பாடங்கள் எல்லாம் நிறைவான காட்சிகள்.


அருள்நிதியின் மாமாவாக முனிஷ்காந்த், மாவட்ட எஸ்பியாக சரத் லோகித்சவா, இன்ஸ்பெக்டராக பத்மன், சந்தோஷ் பிரதாப் காதலியாக சாயாதேவி ஆகியோர் படத்தின் கதாபாத்திரங்களும் சரியாக பொருந்தியுள்ளனர்.  படத்தின் அனைத்து நடிகர்களும் அழுத்தமான கதாபாத்திரங்களை கொடுத்து அவர்களது நடிப்பை பேசும் படி செய்துள்ளார் இயக்குனர்.

பாடல், பின்னணி இசை என எல்லாவற்றையும் இசையை பின்னி எடுத்துவிட்டார் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவு, படத் தொகுப்பு எல்லாமே பாராட்டக்கூடியதாகவே இருந்தது. 


தமிழ் சினிமாவில் சாதி வித்தியாசத்தால் நடக்கும் அடக்குமுறைகளைப் பற்றிப் பேசும் திரைப்படங்களில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் வலிகளை மட்டுமே காட்டி ஆதிக்க சாதிகள் என்றால் எல்லோருமே வில்லன்கள் என்பதை காட்டி வந்த நிலையில், ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு கீழான சாதி என ஒவ்வொரு  சாதியையும் பார்க்கும் கண்ணோட்டம் இருப்பதை மறைத்துவிட முடியாது என்பதை படத்தில் காட்சிகளை வைத்து உணர்த்தி காட்டி இருக்கும் இயக்குனரின் விதம் அருமை 

சம காலத்தில் சாதியை கடந்து மேலத் தெரு கீழத்தெரு பிரிவினை தாண்டி சில இளைஞர்களுக்கிடையே ஒற்றுமை விதையை போடும் நட்பானது விளைச்சலாகி வந்தாலும், சாதியை வைத்து மட்டுமே அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் சூழ்சிகளுக்கு அவர்கள் இரையாக்கப்பட்டு , இரு சமூகத்திற்கிடையே சாதி மோதல் தீயை மூட்டி விட்டு அரசியல் ஆதாயத்தால் பதவி குளிர் காய்பவர்கள் கழுவேற்றி கொல்லப்பட வேண்டியவர்கள் என 'கழுவேத்தி மூர்க்கன்' மூலமாக ஆழமாக அழுத்தம் திருத்தத்தோடு அழகாக சொல்லியிருக்கும் இயக்குனர் உள்ளிட்ட மொத்த படக்குழுவினருக்கும் பாராட்டுக்கள்.

'கழுவேத்தி மூர்க்கன்' அடங்க மறுக்கும் சாதிய வெறி சூழ்ச்சியாளர்களை வேறருக்கும் சாதிக்கு அப்பாற்பட்டவன். பார்ப்பவர்கள் எல்லோரும் பாராட்டி செல்லக்கூடிய அருமையான படம்

  • Share on

பிச்சைக்காரன் 2 திரைப்படம் எப்படி இருக்கு? பார்வை தரும் விமர்சனம்!

தூத்துக்குடியில் நடிகர் விஷால் ஷூட்டிங்

  • Share on