2016ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குநராக திரைத்துறையில் புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். பிச்சைக்காரன் 2 படத்தில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒய் ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அம்மா செண்டிமெண்ட்டை கருவாக கொண்டு உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. அந்த படத்தின் தலைப்பை இரண்டாவது பாகத்திற்கு பயன்படுத்தி ரசிகர்களின் ஆர்வத்தை உயர்த்திய விஜய் ஆண்டனி அதனை பூர்த்தி பன்ன தவறிவிட்டார். பொதுவாக ஒரு படத்தின் இரண்டாவது பாகம் என்பது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும். ஆனால், பிச்சைகாரன் 2 படம் அவ்வாறு கிடையாது.
புதிய தமிழ் சினிமாவிற்கு தமிழில் தலைப்பே கிடைக்கவில்லை என்பது போல் பிச்சைகாரன் என்ற பழைய படத்தின் தலைப்பை பிச்சைகாரன் 2 விற்கு விஜய் ஆண்டனி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு ஏன் வந்தார் என்று தெரியவில்லை.
அண்ணன் தங்கை செண்டிமெண்ட் கதையை காட்ட ஒரு பிளாஷ்பேக், படத்தின் தலைப்பை படத்திற்கு பொருத்த பிச்சைகாரர்கள் கதாபாத்திரங்களை கொண்டு வருதல், மூளை மாற்று அறுவை சிகிச்சை என்றவொரு மருத்துவ அறிவியல் ஒன்று இருக்கு என்பதை காட்டுவதற்காக ஒரு காட்சி, சமூக சிந்தனை என்ற பெயரில் ஆண்டி பிக்கிலி என்ற ஒரு வார்த்தையை தமிழ் அகராதிக்கு அறிமுகப்படுத்துதல் என ஏதே ஏதோ செய்து தனது இயக்குநர் ஆசையை பிச்சைகாரன் 2 படத்தில் நிறைவேற்றி முடித்து விட்டார் விஜய் ஆண்டனி.
படத்தின் கதாநாயகி, ராதா ரவி, ஒய் ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், யோகி பாபு இவர்கள் எல்லாம் படத்திற்கு ஏன் என்று ரசிகர்கள் நொந்து கொள்ளும் அளவிற்கு அவர்களை பயன்படுத்தி இருக்கிறார் விஜய் ஆண்டனி.
ஒரே வரியில் இறுதியாக சொல்ல வேண்டும் என்றால், அம்மா செண்டிமெண்ட்டால் கோடீஸ்வரனாக இருக்கும் விஜய் ஆண்டனி பிச்சை காரனாக மாறுவது பிச்சைகாரன் திரைப்படம். தங்கை செண்டிமெண்ட்டால் பிச்சை காரனாக இருக்கும் விஜய் ஆண்டனி கோடீஸ்வரனாக மாறுவது பிச்சைகாரன் 2 திரைப்படம் அவ்வளவு தான்.
மொத்தத்தில், பிச்சைகாரன் 2 படத்தால் விஜய் ஆண்டனியின் இயக்குநர் ஆசை தீர்ந்திருக்கும். படத்தை பார்க்கும் ரசிகர்கள் நொந்து நூலாகிவிடுவர்.