ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்திற்கு துணிவு என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது தனது 61ஆவது படத்தில் நடித்துவருகிறார். இரட்டை வேடங்களில் அவர் நடிப்பதாலும், க்ரைம் பாணியில் கதை உருவாக இருப்பதாலும் வலிமையில் விட்டதை அஜித்தும், வினோத்தும் பிடிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் கோக்கன், வீரா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஹெச். வினோத்தின் பலம் பொருந்திய ஏரியாவான க்ரைமை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதால் (வங்கி கொள்ளை) படத்தில் பக்கா மாஸ் பேக்கேஜ் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள். படத்தில் அஜித் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. தற்போது படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பானது வெளிநாட்டில் நடக்கவிருப்பதாகவும் அப்போது ஒரேகட்டமாக படத்தை முழுவதுமாக முடித்துவிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சூழலில் படத்துக்கு தலைப்பு என்னவாக இருக்குமென்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். மேலும் துணிவே துணை என்று படத்துக்கு பெயரிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி படத்துக்கு ‘துணிவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நீண்ட தாடியுடன் கோட் சூட்டில் கையில் துப்பாக்கியுடன் அஜித் அமர்ந்திருக்கும்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அமைந்திருக்கிறது. இதனை படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து படம் நின்னு பேசும் என பதிவிட்டுள்ளார்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அஜித் மாஸாக இருக்கிறார். வினோத்தும் நிச்சயம் சிறப்பாக படமாக்கியிருப்பார். எனவே இந்தப் படம் மாபெரும் வெற்றி பெறும் என கூறி போஸ்டரை அதிகம் பகிர்ந்துவருகின்றனர். இதனால் துணிவு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.