இந்திய தேர்தல் ஆணையம், பாலிவுட் நடிகர் சோனு சூட்டை பஞ்சாப்பின் அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங் அவதிப்பட்ட பலருக்கும் உதவிகள் செய்து இந்திய அளவில் புகழ் பெற்றவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஊரடங்கு காலத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தந்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் சிலரை விமானம் மூலமாகவும் சொந்த ஊருக்கு அனுப்பி வந்தார். இதுபோன்ற உதவிகளினால் திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை சோனு சூட் பெற்றார். ஊரடங்கு காலத்தில் செய்த உதவிகள், அதன் அனுபவங்களின் தொகுப்பாக, புத்தகம் ஒன்றையும் அவர் எழுதி வருகிறார். அடுத்த மாதம் இந்தப் புத்தகம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் சோனு சூட்டை பஞ்சாப்பின் அடையாள சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று பஞ்சாப் தேர்தல் அதிகாரி கருணா ராஜூ விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்திய தேர்தல் ஆணையம் சோனு சூட் பஞ்சாபின் அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையத்துக்கு சோனுசூட் நன்றி தெரிவித்துள்ளார்.