இசைஞானி இளையராஜா எழுதி இசையமைத்துள்ள மாயோன் படத்தில் இருந்து "மாயோனே மணிவண்ணா... " என்ற பாடல் பலரையும் கவனம் ஈர்த்துள்ளது.
இயக்குநர் கிஷோர் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் 'மாயோன்' என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார், ராதா ரவி, மாரிமுத்து ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத்தொடர்ந்து மாயோன் படத்தில் இருந்து "மாயோனே மணிவண்ணா... " என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இசைஞானி இளையராஜா எழுதி இசையமைத்துள்ள இப்பாடலை கர்நாடக இசை உலகில் முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களான ரஞ்சனி - காயத்திரி ஆகிய இருவரும் இணைந்து, முதன் முதலாக இளையராஜாவின் இசையில் பாடி உள்ளனர்.
இந்த பாடல் வெளியான வெளியான 48 மணிநேரத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. பக்தி உணர்வு ததும்பும் சொற்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து செவிக்கு இனிய அமுது படைத்திருப்பதாக சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இந்த பாடல் வெளியாகி உள்ளது.