பல திரைப்படங்களில் கிராமத்து கோவில்களின் பூசாரி ஆகவும் ’கருப்பன் குசும்புக்காரன்’ என்னும் வசனத்தின் மூலமூம் பிரபலமானவர் நடிகர் தவசி. பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது புற்றுநோயுடன் போராடி வரும் நிலையில் பார்க்கவே மிகவும் பரிதாபமாக உள்ளார்.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளாக சிறிய கேரக்டரில் நடித்து வந்தவர் தவசி. மதுரை மாவட்டம் தாமரை பட்டியை சேர்ந்த இவர் கிழக்கு சீமையிலே படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்த அவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் தந்தையாக நடித்து ' கருப்பன் குசும்புக்காரன் ' என்ற வசனத்தின் மூலம் மேலும் பிரபலமான தவசி, தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வெள்ளை தாடி மீசையுடன் கம்பீரமாக காட்சியளித்தது இப்போது ஆளே உருமாறி சிகிச்சைக்கு கூட வழியில்லாமல் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார். 30 வருட சினிமாவில் நடிக்கிறேன், கடைசியில் இப்படி ஒரு வியாதி வந்து என்னை முடக்கிப் போடும் என்று எதிர்பார்க்கவில்லை. சிகிச்சை கூட பணம் இன்றி தவிக்கிறேன். என் உடன் நடித்தவர்கள் என்னை ரசித்தவர்கள் எனக்கு உதவி செய்து என்னை பழைய தவசியாக மீட்டு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் தவசி. இவருக்கு மனைவி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
சமீபத்தில் வெளியான புகைப்படத்தில் அவர் ஆள் அடையாளமே தெரியாத வகையில் உள்ளார். நடிகர் தவசியின் அடையாளமே முறுக்கு மீசையும் புன்சிரிப்பு முகமும் தான். ஆனால் தற்போது இவர் தலையில் மொட்டை அடிக்கப்பட்டு, மீசை எதுவும் இல்லாமல் எலும்பும் தோலுமாக காட்சி அளிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.