நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கூகுள் நிறுவனம் புதிய கவுரவம் ஒன்றை அளித்துள்ளது.
நவரசத்தையும் ஒரே நேரத்தில் காண்பிக்கக்கூடிய திறமை பெற்ற ஒரே நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தமிழ் சினிமாவின் முகமாக இருந்த சிவாஜி, இந்திய அளவில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இன்றைக்கும் உள்ளனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தவர்.
சிவாஜியின் நடிப்பில் வெளியான மனோகரா, ராஜ ராஜ சோழன், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற திரைப்படங்கள் ரொம்பவே பிரபலமானவை. எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கக்கூடிய திறமைக்கொண்ட இவர், செவாலியர் பட்டம் பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் ஆவார். இதுதவிர பல தேசிய விருதுகளை பெற்ற சிவாஜி, கடந்த 2001-ஆம் நம்மை விட்டு சென்றார்.
கடந்த 1928-ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த சிவாஜியின் பிறந்தநாள் விழா, ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவாஜியின் 93-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரை கவுரவிக்கும் வகையில் சிவாஜியின் புகைப்படம் கூகுள் டூடிலில் இடம்பெற்றுள்ளது.
உலக அளவில் சிவாஜியை போற்றும் வகையில் கூகுள் இதை வெளியிட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.