தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் சமீபத்தில் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவான எனிமி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து வீரமே வாகை சூடும் என்ற படத்திலும், பெயரிடப்படாத தனது 32வது படத்திலும் விஷால் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவரது பிறந்த நாளன்று வீரமே வாகை சூடும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களி டையே வரவேற்பை பெற்றது. இவரது புது படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாவது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொருபுறம் விஷாலின் ரசிகர்கள் சற்று சோகத்தில் உள்ளனர். காரணம் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எந்த ஒரு தகவலும் தற்போதுவரை வெளியாகவில்லை என்பதே.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் தான் துப்பறிவாளன். மாறுபட்ட கதைகளுக்கு பெயர்போன மிஷ்கினின் துப்பறிவாளன் படமும் அவ்வாறே இருந்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்தது. வியாபார ரீதியாகவும் படம் நல்ல வசூலை பெற்றது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் மிஷ்கின் மற்றும் விஷால் மீண்டும் கூட்டணி அமைத்தனர். இப்படத்தை விஷால் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க முடிவு செய்தார். இளையராஜா இசையமைக்க துப்பறிவாளன் 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது.
அந்த சமயத்தில் தான் படத்திற்கு மிஷ்கின் அதிக பட்ஜெட் இழுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின் விஷால் மற்றும் மிஷ்கின் இடையே தொடர்ந்து சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், மிஷ்கின் இப்படத்தில் இருந்து விலகினார். பின்னர் விஷால் தானே படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். ஆனால், தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவே இல்லை.
இதற்கிடையில் துப்பறிவாளன் 2 படத்தை விட்டு விலகிய, மிஷ்கின் அவரது பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பை இன்று முடித்துவிட்டார். ஆனால் விஷால் தற்போது வரை ஒரு பிள்ளையார் சுழி கூட போடவில்லை. இயக்குனர் மிஷ்கின் இயக்கி இருந்தால் தற்போது படம் முடிவடைந்து திரைக்கு வந்திருக்கும். ஆனால் விஷால் இப்படி கிடப்பில் போட்டு விட்டாரே என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.