பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து 'ஆனந்தம் விளையாடும் வீடு' என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது சேரன் கால் இடறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பானடவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் சேரன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவருக்கும், லாஸ்லியாவுக்குமான தந்தை, மகள் பாசம் பார்வையாளர்கள் அனைவரையும் நெகிழ செய்தது. பிக்பாஸ் விட்டு வெளிய வந்த பிறகு இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சேரன், ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவ்வப்போது பதிலளித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரகுநாதன் என்பவர் தயாரிக்கிறார். சரவணன், ஜாக்குலின், டேனியல், மைனா நந்தினி, சிங்கம் புலி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நடிகர்கள் அந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது சேரன் கீழே விழுந்து அவருக்கு 8 தையல் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இயக்குனர் நந்தா பெரியசாமி கூறியபோது :
தயாரிப்பாளர் ரகுநாதன் இந்தப் படத்திற்காக செட் அமைப்பதற்கு பதிலாக 80 லட்சம் ரூபாய்க்கு புதிதாக பெரிய பிரம்மாண்டமான வீடு கட்ட ஆரம்பித்தார். அந்த வீடுதான் கதைக்களம். கதைப்படி சேரன் வீட்டை சுற்றி பார்க்கும் போது கீழே விழுமாறு காட்சி. சரவணன் அண்ணனாகவும் சேரன் தம்பியாக நடித்து வருகின்றனர். கீழே விழும் காட்சியில் சேரன் நிஜமாகவே வழுக்கி விழுந்துவிட்டார் . அவருக்கு எட்டு தையல் போடப்பட்டது. தையல் போடப்பட்ட அடுத்த பத்து நிமிடத்தில் வந்து நடித்துக் கொடுத்தார். இன்று காலை தான் அவருக்கு தையல் பிரிக்கப்பட்டது. அந்த வலியிலும் கடந்த மூன்று நாட்கள் அர்ப்பணிப்புடன் நடித்துக் கொடுத்தார். இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று தெரிவித்தார். எல்லாம் முடிந்த பிறகு தான் நான் சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.