இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் என்ற படத்தில் நடித்தார். இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் மெகா ஹிட்டானது. இதை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில் ‘பிச்சைக்காரன்- 2 ’உருவாகிறது. இந்த இரண்டாம் பாகத்தினை விஜய் ஆண்டனியே இயக்குவதாகவும் உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்து மதத்தினரை பெரிதும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் பரபரப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டி ருக்கிறார்.
அதில் , ‘’இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் காளி படத்தோடு பிச்சைக்காரன் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது . இதனால் விஜய் ஆண்டனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். மன்னிப்பு கேட்ட பின்னர் அந்த போஸ்டரை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் விஜய் ஆண்டனி மீதும் அவரது தயாரிப்பு நிறுவனம் மீதும் வழக்கு தொடரப்படும்’’ என்று எச்சரித்துள்ளார்.
மேலும், சினிமா என்கிற போர்வையில் இந்து கடவுள்களை அசிங்கப்படுத்தும் விதமாக மத நல்லிணக்கத்திற்கு தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் வகையில் போஸ்டர்கள் வெளியாகி வருவது கண்டனத்திற்கு உரியது. இந்து கடவுள்களை இப்படி பயன்படுத்துவது போல மற்ற மத கடவுள்களின் படத்தை போட்டு பிச்சைக்காரன் -2 என்ற வார்த்தையை பயன்படுத்தும் துணிவு இருக்கிறதா என்றும் அவர் கேட்டிருக்கிறார்.
இந்து கடவுள் காளியின் படத்தை போட்டு அதில் பிச்சைக்காரன் என்ற வாசகம் இருப்பதால் இந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்கிறார் சோலை கண்ணன்.